ஐதராபாத்:''இந்தியா, பலவீனமான நாடு அல்ல; எதிரியின் எத்தகைய ஆக்கிரமிப்பு முயற்சிக்கும் தகுந்த பதிலடி கொடுக்கும்,'' என, ராணுவத் துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
தெலுங்கானா தலைநகர், ஐதராபாதின், துன்டிகல் புறநகர் பகுதியில், இந்திய விமானப் படை அகாடமி உள்ளது. இங்கு பயிற்சி முடித்த மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில், ராஜ்நாத் சிங், பங்கேற்று பேசியதாவது:
தகுந்த பதிலடி
இந்தியாவை, இனியும் பலவீனமான நாடு என, சொல்ல முடியாது. இந்த புதிய இந்தியா, எத்தகைய ஆக்கிரமிப்பு முயற்சிகளையும் சகித்துக் கொள்ளாது. எந்த பிரச்னையையும், பேசித் தீர்க்கவே இந்தியா விரும்புகிறது.நம் நாடு, கொரோனாவை சமாளிப்பதில் கவனம் செலுத்திய சமயத்தில், எல்லையில், சீனப் படைகள் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டன. ஆனால், நம் நாடு பலவீனமானது அல்ல என, நிரூபித்தது. புதிய இந்தியா, எதிரியின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு தகுந்த பதிலடி கொடுத்தது.இதை எண்ணற்ற நாடுகள் பாராட்டியுள்ளன.
மறைமுகமாக போர்
மற்றொரு அண்டை நாடு, நம்மிடம் நான்கு முறை தோல்வி அடைந்தபோதும், இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பயங்கரவாத ஊக்குவிப்பின் மூலம், இந்தியா உடன் மறைமுகமாக போர் புரிந்து வருகிறது. நிலம், நீர், வானம் என, எந்த வடிவில் போர் நடந்தாலும், நம் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுக்க, தயாராக உள்ளனர்.
சமீபத்தில், பிரான்சின், 'ரபேல்' போர் விமானம், இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டதன் மூலம், அதன் வலிமை அதிகரித்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார். விமான படை பயிற்சியில் முதலிடத்தை பிடித்த, அய்ஷிஷ் கடேரிக்கு, விமான படை தளபதியின் கவுரவ விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், போர் விமானங்கள், வானில் அசத்தலான சாகஸங்கள் செய்து காட்டியது அனைவரையும் கவர்ந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE