புதுடில்லி:ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பொறுப்பேற்க உள்ள இந்தியாவுக்கு உள்ள முன்னுரிமைகள் குறித்து, பிரிட்டன் தரப்பிற்கு, விளக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் நடந்த, ஐ.நா., எனப்படும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின், தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில், 184 நாடுகளின் ஆதரவுடன், இந்தியா வெற்றி பெற்றது. அடுத்த மாதம், தற்காலிக உறுப்பினர் என்ற அந்தஸ்தை பெற உள்ள இந்தியா, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அந்த பதவியில் இருக்கும்.
இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விவகாரங்கள் குறித்து, இந்தியா - பிரிட்டன் இடையே, நேற்று ஆலோசனை நடந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய வெளியிறவுத் துறை அமைச்சகத்தின் இணை செயலர் பிரகாஷ் குப்தா தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
இதேபோல், பிரிட்டன் தரப்பில், அந்நாட்டு வெளியுறவுத் துறை பலதரப்பு கொள்கை இயக்குனர் ஜேம்ஸ் கரியூகி தலைமையிலான குழு பங்கேற்றது.இந்த சந்திப்பில், தற்காலிக உறுப்பினராக தேர்வாகி உள்ள இந்தியாவுக்கு, பிரிட்டன் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சார்ந்த விவகாரங்கள் குறித்து, இருதரப்பினரும் விரிவாக ஆலோசித்தனர்.
தற்காலிக உறுப்பினராக பொறுப்பேற்றதும், தங்களுக்கு இருக்கும் முன்னுரிமைகள் குறித்து, பிரிட்டன் அதிகாரிகளிடம், இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் உள்ள உறுதியான நிலைப்பாடு குறித்தும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் கீழ், அனைத்து விவகாரங்களிலும் ஒன்றிணைந்து பணியாற்ற, இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE