என் டாக்டர் கனவு நனவானது!
'லம்பாடி' என்ற நாடோடி சமூகத்தின், மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக இருந்த போதிலும், டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில், 'நீட்' தேர்வு எழுதி, குறைந்த மதிப்பெண் பெற்ற போதிலும், அரசுப் பள்ளி மாணவர் ஒதுக்கீட்டில், மருத்துவம் படிக்க வாய்ப்பு பெற்றுள்ளது குறித்து
சவுமியா:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள, பி.எல்.தண்டா என்ற கிராமம் தான் சொந்த ஊர். அப்பா, அவ்வப்போது கேரளா சென்று, விவசாய பணிகளை மேற்கொள்வார். அம்மா ராதா, விவசாய கூலி. உடன்பிறந்தவர்கள், அக்கா, இரண்டு தம்பிகள்.படிப்பு தான், வாழ்க்கையை மாற்றும் என, அப்பா அடிக்கடி சொல்வார். அக்கா, 10வது வரை படித்து விட்டு, திருமணமாகி சென்று விட்டார். எனக்கு சிறு வயது முதலே, டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.அப்பாவை போலவே, எங்கள் பள்ளி தலைமையாசிரியர் சதாசிவமும், என்னுடைய டாக்டர் விருப்பத்தை சாகாமல் பார்த்துக் கொண்டார்.
'வெறியோடு படி; நிச்சயம் டாக்டர் ஆவாய்' என, அவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.பிளஸ் 2 முடித்ததும், நேரடியாக, 'நீட்' தேர்வு எழுதினேன். பயிற்சி எதுவும் எடுக்காததால், 90 மார்க் தான் வந்தது. அதனால், எம்.பி.பி.எஸ்., வேண்டாம்; நர்சிங் படி என, பலரும் அறிவுரை கூறினர். எனினும், எனக்கு, டாக்டர் பணி மீதான விருப்பம் மட்டும் குறையவே இல்லை. அப்பா கடன் வாங்கித் தந்த பணத்தில், நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று, இரண்டாவது முறையாக எழுதினேன். 184 மதிப்பெண் கிடைத்தது.
இவ்வளவு குறைந்த மதிப்பெண்ணுக்கு, டாக்டர் படிக்க வாய்ப்பு கிடைக்காது என பலரும் கூறினர். நானும் அப்படித் தான் நம்பினேன். அந்த நேரத்தில் தான், தமிழக அரசு, 'அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கிடைக்கும்' என, அறிவிப்பு வெளியிட்டது. நம்பிக்கையுடன் கவுன்சிலிங் சென்றேன். தனியார் கல்லுாரி தான் கிடைத்தது. பணம் அதிகம் செலவிட வேண்டுமே என நினைத்து, வேண்டாம் என, சொல்ல இருந்தேன்.அங்கிருந்த அதிகாரி ஒருவர் தான், 'வங்கியில் கடன் தருவர்; வாங்கி, டாக்டருக்கு படிம்மா...' என, அறிவுரை கூறினார். அதன்படி, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, டாக்டருக்கு படிக்க தேர்வானேன். எங்கள் ஜாதியிலேயே, டாக்டருக்கு படித்த முதல் பெண் நானாக தான் இருக்க வேண்டும். டாக்டராகி, என்னைப் போன்று கஷ்டப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பேன். இதற்காக, எனக்கு உதவி செய்த ஆசிரியர்கள், முகம் தெரியாத, கவுன்சிலிங்கில் இருந்த அதிகாரி உட்பட
பலருக்கும் நன்றி!
மரங்களே என் குழந்தைகள்!
கர்நாடகாவில், ஆயிரக் கணக்கான மரங்களை நட்டு, நாடே போற்றும் இயற்கை அன்னையாக வாழ்வது பற்றி, 110 வயது திம்மக்கா: எங்க வீட்டில் ஆறு பேர். என் பெற்றோருக்கு நான் மூன்றாவதாக பிறந்தேன். பெற்றோர், கூலி வேலை தான் செய்தனர். எனக்கு, 20 வயதில் கல்யாணம் ஆகி விட்டது. 30 ஆண்டுகளுக்கு முன், கணவர் இறந்து விட்டார். எங்களுக்கு குழந்தைகள் இல்லை.
சொந்தக் கிராமமான குனிக்கல் என்ற இடத்திலிருந்து, எட்டு ஆண்டுகளுக்கு முன், பெங்களூரு வந்து விட்டேன்.எனக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்காவிட்டாலும், பல தலைமுறைகளுக்கு வளர்ந்து நிற்கும் மரங்களை ஆயிரக்கணக்கில் வளர்த்துள்ளேன். பெரும்பாலும் ஆல மரங்களைத் தான் நடுகிறேன். மரம் நடுவது எளிது. அவற்றை பராமரிப்பது தான் கஷ்டம். ஒரு பக்கம், மரக்கன்றுகளை வைத்தால், மறுபுறம் அவற்றை, கால்நடைகள் தின்று விடும். எனவே, கஷ்டப்பட்டு தான், மரங்களை பராமரிக்க வேண்டும்.சில இடங்களில் மரங்கள் நடும் போது, தண்ணீர் இருக்காது. நீண்ட துாரம் நடந்து சென்று தான், தண்ணீர் எடுத்து வர வேண்டும். கஷ்டப்பட்டு அப்படி வளர்த்த மரங்களை இப்போது பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.ஆரம்பத்தில் என்னை திட்டியவர்கள் எல்லாம் இப்போது புகழ்கின்றனர். மரங்கள் தான் என் குழந்தைகள். என்னோட குழந்தைகள், நாட்டிற்கு வளத்தை கொடுக்கின்றனர்.
நான் வளர்த்த மரக்குழந்தைகளின் மதிப்பு, 400 கோடி ரூபாய் என்கின்றனர்.
எனினும், நான் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கர்நாடகா அரசு கொடுக்கும் முதியோர் ஓய்வுத்தொகை மற்றும் விருப்பப்பட்டவர்கள் வழங்கும் பணத்தாலும், என் வாழ்க்கை உருளுது.தமிழகத்திலிருந்து சமீபத்தில் ஒரு தம்பதி, என்னைப் பார்க்க வந்திருந்தாங்க. அவர்களுக்கு, 60 வயதுக்கு மேலாகிறது. 'எங்களுக்கும் குழந்தைகள் இல்லை. வாழ்க்கையே வீண் என நினைத்திருந்த போது, உங்களைப் பற்றி அறிந்து, மரங்கள் நட்டு வளர்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டு, அதை சேவையாக செய்து வருகிறோம்' என்றனர். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, மரங்கள் வளர்க்க ஆசைப்பட வேண்டும். காலத்தின் கட்டாயம் அது. நான் உயிர் பிழைத்து, மறுஜென்மம் எடுத்ததே, மரங்கள் வளர்க்கத் தான். நம் நாட்டில் இருக்கும் எல்லா மரங்களும், என் குழந்தைகள் தான். மரக் குழந்தைகளை நன்றாக வளர்த்து, அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுக்கணும். என் கடைசி மூச்சு உள்ள வரை மரங்களை வளர்க்க வேண்டும். இது தான் என் இறுதி ஆசை!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE