காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என, அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களுடன் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா, நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.
லோக்சபாவுக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், காங்கிரஸ் இரண்டாவது முறையாக படுதோல்விஅடைந்தது. இதையடுத்து, கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். கட்சியின் இடைக்கால தலைவராக, சோனியா பொறுப்பேற்றார். பல்வேறு மாநிலங்களிலும், கட்சிக்கு ஏற்பட்ட தொடர் தோல்வி, மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் ஆட்சியை இழந்தது போன்றவற்றால், கட்சித் தலைமைக்கு எதிராக, மூத்த தலைவர்கள் குரல் எழுப்பினர்.
சமாதானம்
கட்சியை பலப்படுத்த, முழுநேர தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கோரி, கபில் சிபல், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், 23 பேர், சோனியாவுக்கு கடிதம் எழுதினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அடுத்த ஆறு மாதங்களுக்குள், புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறி, அவர்களை காங்., தலைமை சமாதானம் செய்தது. சமீபத்தில் நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இது கட்சியில் அதிருப்தி குரல்களை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதிருப்தி தலைவர்கள் உட்பட, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரையும் சந்திக்க, சோனியா முடிவு செய்தார்.அதிருப்தி தலைவர்களை சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்ட, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், அவர்களை சோனியா சந்தித்து பேசுவதற்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். டில்லியின் காற்று மாசு காரணமாக, கோவா சென்று ஓய்வுவெடுத்து திரும்பிய சோனியாவை, கடந்த வாரத்தில், இருமுறை கமல்நாத் சந்தித்து, ஆலோசனை கூட்டத்துக்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசித்தார்.
இந்நிலையில், டில்லியில் சோனியாவின் இல்லத்தில், காங்., மூத்த தலைவர்கள் கூட்டம், நேற்று காலை நடந்தது. சாதாரணமாக, கட்சி கூட்டங்கள், வீட்டுக்குள் தான் நடத்தப்படும். கொரோனா காரணமாக, இல்லத்தின் முன் உள்ள மிகப்பெரிய புல்வெளியில், இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கொரானா தொற்று இல்லை என, உறுதி செய்த பின், கூட்டத்தில் பங்கேற்க தலைவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பல்வேறு பிரச்னை
கூட்டத்தில், சோனியா குடும்பத்தின் தீவிர விசுவாசிகளும், மூத்த தலைவர்களுமான ஏ.கே.அந்தோணி, சிதம்பரம், அம்பிகா சோனி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் பங்கேற்றனர். தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய, குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சசி தரூர், மணீஷ் திவாரி, புபீந்தர்சிங் ஹுடா, முகுல் வாஸ்னிக் உள்ளிட் டோரும், கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சோனியாவுடன், கட்சி யின் பொதுச் செயலர் பிரியங்கா, எம்.பி., ராகுல் ஆகியோரும் பங்கேற்றனர்.
பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் ரத்து, பொருளாதார மந்தநிலை, சீன ஊடுருவல், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. அத்துடன், கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்வு செய்வது, கட்சியின் அமைப்பு ரீதியிலான பிரச்னைகள், உட்கட்சி தேர்தல் ஆகியவை பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.
இது பற்றி காங்., வட்டாரங்கள் கூறியதாவது:கட்சியின் அனைத்து தரப்பு தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த சோனியா திட்டமிட்டுள்ளார். இது முதல்நாள் என்பதால், சம்பிரதாயத்திற்காக அனைவரும் அழைக்கப்பட்டனர். அடுத்து வரும் நாட்களில், குறிப்பிட்ட மற்றும் முக்கிய தலைவர்களுடன் சோனியா தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளார். இவ்வாறு காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
மாணவர் பிரிவு தலைவர் ராஜினாமா
கட்சியை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, மாணவர் காங்கிரசின் தேசிய பொறுப்பாளர் பதவியில் இருந்து, ருச்சி குப்தா ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. இவர், காங்கிரஸ் பொதுச் செயலரும் ராகுலின் நிழலாக கருதப்படுபவருமான, கே.சி.வேணுகோபால் மீது சரமாரியாக குற்றம் சாட்டி, அறிக்கை வெளியிட்டுள்ளார். ருச்சி குப்தா, ராகுலின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முன்னாள் எம்.பி.,க்கு பதவி
கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர்களாக அனிருத் சிங், விகாஸ் உபாத்யாய், பிரித்விராஜ் பிரபாகர் சாத்தே, விஸ்வநாதன், ஏவன் டிசாசோ, மோகன் ஆகியோரை நியமித்து, சோனியா அறிவிப்பு வெளியிட்டார். இவர்களில், விஸ்வநாதன் தமிழகத்தைச் சேர்ந்தவர். காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் எம்.பி.,யான இவர், கேரள மாநிலத்துக்கான மேலிட பொறுப்பாளராக செயல்படுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
'99.99 சதவீத தகுதி அவருக்குதான்'
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:கட்சியை வழிநடத்த, ராகுல் தான் தகுதியானவர் என, 99.99 சதவீதம் தொண்டர்கள் நம்புகின்றனர். அவரால் தான், மோடி அரசை துணிச்சலுடன் எதிர்த்து, களத்தில் நிற்க முடியும் என, கருதுகின்றனர். இருப்பினும், தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து, ராகுல் தான் முடிவு எடுக்க வேண்டும்.இது அதிருப்தியாளர்களுக்கான கூட்டம் அல்ல. சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் தான். பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE