தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் பணிகளை, அரசியல் கட்சிகள் துவக்கியுள்ள நிலையில், ரஜினியின் அறிவிப்பு, கூட்டணியை முடிவு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி கட்சி துவக்கிய பின்னரே, மற்ற கட்சிகள், தங்கள் கூட்டணியை முடிவு செய்ய காத்திருக்கின்றன. எனவே, புத்தாண்டு பிறப்பு, தமிழக அரசியலில், புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கு, வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே துவக்கத்தில், பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.எனவே, அனைத்து கட்சிகளும், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை துவக்கி உள்ளன.தி.மு.க., அணியை பொறுத்தவரை, 2019 லோக்சபா தேர்தல் கூட்டணி கட்சிகள், அப்படியே தொடர்கின்றன. அதேபோல, அ.தி.மு.க., கூட்டணியிலும், தற்போது வரை, பழைய கூட்டணி நீடிக்கிறது. ஆனால், இரு கூட்டணியிலும் உள்ள கட்சிகள், கூட்டணியை இன்னமும் இறுதி செய்யாமல் உள்ளன.
இதற்கு காரணம், நடிகர் ரஜினி.இவர், ஜனவரியில் அரசியல் கட்சியை துவக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவர் கட்சி துவக்கிய பின், அவருக்கு மக்கள் அளிக்கும் ஆதரவுக்கேற்ப, அவருடன் களம் இறங்க, பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளன.அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ஜ., கட்சி, திடீரென ரஜினியுடன் கைகோர்த்தால், அது சிக்கலை ஏற்படுத்தும். அ.தி.மு.க., வில், 'சீட்' கிடைக்காதவர்கள் மற்றும் அதிருப்தியில் உள்ளவர்கள், ரஜினி பக்கம் தாவுவர்.பா.ஜ.,வை பின்பற்றி பா.ம.க.,வும், அங்கு செல்ல வாய்ப்புள்ளது.அவ்வாறு சென்றால், அ.தி.மு.க., வேறு சில கட்சிகளை இணைத்து, கூட்டணியை பலப்படுத்த வேண்டியதிருக்கும்.
அதேபோல, தி.மு.க.,வில், 'சீட்' பங்கீட்டில், பிரச்னை ஏற்பட்டால், பாதிக்கப்படும் கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணிக்கோ, ரஜினி பக்கமோ வர வாய்ப்புள்ளது. நடிகர் கமல், ஏற்கனவே ரஜினியுடன் கைகோர்க்க தயார் என, அறிவித்துள்ளார். அ.ம.மு.க.,வும், ஏதேனும் கட்சிகள் வந்தால், கூட்டணி அமைக்க தயாராக உள்ளது.
ரஜினி வருகையை, அனைத்து கட்சிகளும் எதிர்பார்ப்பது போல, அ.ம.மு.க.,வினர், சசிகலா வருகையை எதிர்பார்க்கின்றனர். அவர் வருகை, அ.தி.மு.க.,வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.ஒவ்வொரு கட்சியும், யாருடன் சேர்ந்தால் லாபம் என, கணக்கிட்டு வருவதால், கூட்டணி முடிவாவதில் இழுபறி நீடிக்கிறது.
இதன் காரணமாக, ரஜினி கட்சி துவக்கிய பின், தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, புத்தாண்டில் புதிய மாற்றங்கள் நிகழும் என, எதிர்பார்க்கப்படுகிறது. -
நமது நிருபர் -