அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், நடிகர் ரஜினியை ரகசியமாக சந்தித்து பேசியதாக வெளியான தகவல், அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, இ.பி.எஸ்., தன்னிச்சையாக, பிரசாரத்தை துவக்குவதாக அறிவித்து, களத்தில் இறங்கி விட்டார். இது, துணை முதல்வர் மற்றும் பிற நிர்வாகிகளிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருந்து, ஓ.பி.எஸ்., ஒதுங்கினாலும், கட்சியில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்பது, அவருக்கு மன வருத்தத்தை அளித்துள்ளது. அவர் அதிருப்தியில் இருப்பதால், அவர் குறித்த வதந்திகளும், அதிகம் வெளியாகி வருகின்றன.
நடிகர் ரஜினி துவக்க உள்ள கட்சி, சசிகலா விடுதலை ஆகியவை, அ.தி.மு.க.,வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி கட்சி துவக்கினால், அவர் பின்னால் செல்ல, அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் தயாராகி வருகின்றனர். அவர்கள், ரஜினி தரப்பினருடன், தொடர் பேச்சில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வத்திடம், ரஜினி கட்சி துவக்குவது குறித்து கேட்டபோது, அவருடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இதை, அ.தி.மு.க., நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் திருப்பதி சென்றிருந்த பன்னீர்செல்வம், அங்கிருந்து ரகசியமாக, ஐதராபாத் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு படப்பிடிப்பில் இருந்த ரஜினியை சந்தித்து பேசியதாக தகவல் உலா வருகிறது. அப்படியே, இந்த சந்திப்பு நடந்திருந்தாலும், அது கூட்டணி விவகாரமாக தான் இருக்கும் என, அ.தி.மு.க., வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
அதேநேரத்தில், தேர்தல் நேரத்தில், தனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காவிட்டால், இ.பி.எஸ்., தரப்புக்கு எதிராக, பன்னீர்செல்வம் போர்கொடி துாக்குவார் என்றும், அந்த நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்தே, இருவரும் பேசியதாக, மற்றொரு தரப்பில் சொல்லப்படுகிறது.
இவை அனைத்தையும், பன்னீர் தரப்பினர் மறுத்துள்ளனர். பன்னீர்செல்வத்திற்கு களங்கம் ஏற்படுத்தவே, சிலர் திட்டமிட்டே, அவர் குறித்த வதந்திகளை பரப்பி வருகின்றனர். இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேர்தல் களத்தில், அவரது செயல்பாடு இருக்கும் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -