சென்னை:'மனித வெடிகுண்டாக மாறி, முதல்வர் மீது தாக்குதல் நடத்துவேன்' என, முதல்வர் பழனிசாமி., இல்லத்திற்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டிற்கு, நேற்று முன்தினம் மாலை, ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், 'மனித வெடிகுண்டாக மாறி, முதல்வர் மீது தாக்குதல் நடத்துவேன்' என, மிரட்டல் விடப்பட்டிருந்தது.
இது குறித்து, அபிராமபுரம் போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், சென்னை, கே.கே.நகர், 10வது செக்டர் என்ற முகவரியில் இருந்து, பிரவீன்குமார் என்ற பெயரில், மிரட்டல் கடிதம் வந்தது தெரியவந்தது.கடிதத்தில் உள்ள மொபைல் எண்ணில், போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது, மறுமுனையில் பேசிய நபர், 'நான் தான் பிரவீன்குமார்' என, பெயரை மட்டும் கூறி, இணைப்பை துண்டித்தார்.
போலீசார், மீண்டும் தொடர்பு கொண்டு, 'உங்கள் பெயரில், முதல்வருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதுபற்றி விசாரிக்க வேண்டும்; நீங்கள் காவல் நிலையத்திற்கு வர வேண்டும்' என்றனர்.அதற்கு, 'கடிதத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் நண்பர்கள் தான், இதுபோன்று செய்திருக்க கூடும்' என, தெரிவித்தார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கடிதத்தை எழுதியது யார் என, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE