தமிழகத்தில், பொங்கல் பரிசாக, அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய், ரேஷனில் வழங்கப்பட உள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., தன் தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளில், முக்கிய அறிவிப்பாக, நேற்று இதை வெளியிட்டார்.
மேலும், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பும் இலவசமாக வழங்கப்படுகிறது. வழக்கமான துண்டு கரும்புக்கு பதிலாக, இந்த முறை முழு கரும்பு வழங்கப்படும் என்றும், ஜன., 4 முதல், ரேஷன் கடைகளில் கிடைக்கும் என்றும், முதல்வர் தெரிவித்துள்ளார்.முதல்வர் இ.பி.எஸ்., நேற்று சேலம் மாவட்டத்தில், தன் சொந்த தொகுதியான, இடைப்பாடி சட்டசபை தொகுதியில், தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.
மக்கள் வெள்ளம்
கோவில் வளாகத்தில் இருந்து, 50 அடி துாரத்தில் குவிந்திருந்த மக்கள் வெள்ளத்தில், ஆறு நிமிடம் நடந்து சென்றார். மலர் துாவி, கும்ப மரியாதை சகிதமாக, மக்கள் வரவேற்பு அளித்தனர்.
கோவில் நுழைவாயிலில், சுதர்சன பட்டாச்சாரியார், பரிவட்டம் கட்டி, முதல்வருக்கு வரவேற்பு அளித்தார்.சுவாமி தரிசனம் செய்த பின், காலை, 11:44க்கு, முதல்வர் வெளியே வந்தார். அங்கிருந்து சாலையில் நடந்து சென்று, மக்களை சந்தித்து, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு திரட்டினார்.அதன்பின், 'மினி கிளினிக்'கை திறந்து வைத்து பேசினார். அங்கிருந்து, மீண்டும் நடந்து வந்து, கோவில் வளாக பகுதியில், தயாராக இருந்த பிரத்யேக பிரசார வேனில் ஏறினார். மதியம் 12:20 மணிக்கு தேர்தல் பிரசாத்தை துவக்கினார்.
அம்மா 'மினி கிளினிக்'
நேற்று மாலை, இடைப்பாடி ஊராட்சி ஒன்றியம், இருப்பாளியில் நடந்த அரசு விழாவில், முடிவடைந்த திட்டப் பணிகளையும், 'அம்மா மினி கிளினிக்'கையும், திறந்து வைத்தார். புதிய திட்டப் பணிகளுக்கு, அடிக்கல் நாட்டினார்.
அப்போது, அவர் பேசியதாவது:தமிழர்களின் திருநாளாம், தைத்திருநாள் வரவிருக்கிறது. அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும், அரசு பொங்கல் பரிசு அறிவித்து வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டு, பலருக்கு வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.டெல்டா பகுதிகளில், புயலினால் கடுமையான மழை பெய்ததால், அங்கே தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜன. 4-ல் டோக்கன்
இதையெல்லாம், அரசு கருத்தில் வைத்து, தைப் பொங்கலை, தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ள, 2.06 கோடி பேருக்கும், பொங்கல் பரிசாக, தலா, 2,500 ரூபாய் வழங்கப்படும். ஜனவரி, 4ம் தேதி முதல், இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.அத்துடன், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, துண்டு கரும்புக்கு பதிலாக முழு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, ஐந்து கிராம் ஏலக்காய், நல்ல துணிப்பை போன்றவை வழங்கப்படும்.
தமிழர் திருநாளான தை திருநாளை, மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, ஜெ., அரசு, இத்திட்டத்தை அமல்படுத்துகிறது.அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், துறை அதிகாரிகள், வீடு வீடாக சென்று, 'டோக்கன்' கொடுப்பர். அந்த டோக்கனில், எந்தெந்த தேதியில், யார் வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதியில், நீங்கள் ரேஷன் கடைக்கு சென்றால் போதும்; தை பொங்கல் தொகுப்பை, உங்களுக்கு வழங்குவர்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.
மீண்டும் வாய்ப்பு தாருங்கள்!
''மக்களுக்காக உழைக்க தயாராக இருக்கிறோம்; மீண்டும் வாய்ப்பு தாருங்கள்,'' என, இடைப்பாடி தொகுதியில், தேர்தல் பிரசாரத்தை துவக்கிய, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.
பிரசார வேனில் நின்றபடி, அவர் பேசியதாவது:கொரோனா நோய் தொற்று, அரசின் கடுமையான முயற்சியால், முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். தமிழகத்தை, மற்ற மாநிலங்களும் பின்பற்றும் அளவுக்கு, திறமை மிக்க அரசாக, அ.தி.மு.க., உள்ளது. அதற்காக, பல தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், 'என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள்?' எனக் கேட்டு விமர்சிக்கிறார். தி.மு.க., ஆட்சியில், எப்போது மின்சாரம் வரும்; மின் தடை வரும் என தெரியாது. இப்போது, மின்மிகை மாநிலமாக, தமிழகம் உள்ளது. தி.மு.க., - எம்.பி., கனிமொழி, இடைப்பாடி தொகுதியில், தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளார். அவரது பகல் கனவு பலிக்காது. 1977 முதல், இத்தொகுதியில், தி.மு.க., வெற்றி பெறவே இல்லை.
அ.தி.மு.க., - கூட்டணி தான், வெற்றி பெற்றுள்ளது. இது, அ.தி.மு.க.,வின் கோட்டை.. தி.மு.க.,வின் ஒட்டுமொத்த தலைவர்கள் பிரசாரம் செய்தாலும், வெற்றி பெற முடியாது.
இந்தியாவே ஆச்சர்யப்படும்படி, தமிழக மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறேன். 2021 தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். தொடர்ந்து மக்களுக்கு பணியாற்ற, இந்த அரசு தயாராக உள்ளது. உழைக்க தயாராக இருக்கிறோம். மீண்டும் வாய்ப்பு தாருங்கள்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.
பொங்கல் பரிசு வழங்கரூ.5,500 கோடி தேவை
தமிழகத்தில், 2.06 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாயுடன், பொங்கல் பொருட்கள் வழங்க, 5,500 கோடி ரூபாய் தேவைப்படும்.தமிழக அரசு, நடப்பாண்டில் பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், 2 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றை வழங்கியது. 1.98 கோடி கார்டுதாரர்கள், ரொக்க பணத்துடன், பரிசு தொகுப்பை வாங்கினர்.
அதற்காக, அரசு, 2,363 கோடி ரூபாய் செலவு செய்தது.வரும் பொங்கலுக்கு, 2.06 கோடி அரிசி கார்டுதாரருக்கு, தலா, 2,500 ரூபாயுடன், பொங்கல் பரிசு பொருட்கள் இலவசமாக வழங்க இருப்பதாக, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். இதனால், ரொக்க பணமாக வழங்க மட்டும், 5,150 கோடி ரூபாய் தேவைப்படும்.மேலும், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு ஆகியவற்றுக்கு, 350 கோடி ரூபாய் வரை தேவைப்படும். இதனால், ரொக்கத்துடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக மட்டும், அரசுக்கு, 5,500 கோடி ரூபாய் தேவை.
- நமது நிருபர் -