சென்னை:அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி, சட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தவும், விரைந்து முடிவுகளை அறிவிக்க முயற்சிகள் எடுக்கவும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'அரியர்' தேர்வை, 'ஆன்லைன்' முறையிலோ, நேரிலோ நடத்தி, குறிப்பிட்ட அவகாசத்திற்குள் முடிவுகளை வெளியிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சீர்மிகு சட்ட கல்லுாரி மாணவர் சஞ்சய் காந்தி என்பவர், மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
சட்ட பல்கலை தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், வழக்கறிஞர் வசந்தகுமார் ஆஜராகினர்.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வி.ராமகிருஷ்ணன் ஆஜராகி, ''ஜன., 6ம் தேதி தேர்வு துவங்கி, பிப்., இறுதி வரை நடக்கும். தேர்வு முடிவு, மே மாதம் தான் வெளியிடப் படும். அதனால், இறுதி ஆண்டு அரியர் தேர்வுகளை, தனியாக நடத்தவோ அல்லது விரைந்து விடைத்தாளை திருத்தவோ பரிசீலிக்க வேண்டும்,'' என்றார்.
அதற்கு, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ''இறுதியாண்டு அரியர் தேர்வை, தனி தேர்வாக நடத்த முடியாது. அவ்வாறு நடத்தினால், தேர்வு அட்டவணையில் பாதிப்பு ஏற்படும்,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கேடஷ் பிறப்பித்த உத்தரவு:தேர்வு நடத்துவதில் அடங்கி உள்ள பணியின் அளவை கருதி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வு அட்டவணையில் இடையூறு செய்ய, நீதிமன்றம் விரும்பவில்லை. எனவே, அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி, தேர்வு நடவடிக்கைகளை தொடரலாம்.தேர்வு முடிவுகளை, முடிந்த அளவில் விரைவில் வெளியிட முயற்சிகள் எடுக்கலாம்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE