சமீப காலமாக, தற்கொலை செய்திகள், ஊடகங்களில் அதிகம் வந்த வண்ணமாக உள்ளன. சாதாரண ஏழைகள் முதற்கொண்டு, மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் வரை, பல காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இதில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, 'டிவி' சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை.'டிவி' சீரியல்கள் பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது. அதைப் பார்ப்பது வேஸ்ட்; பார்ப்பதால், மனமும், உடலும் தான் கெடும். அந்த நேரத்தில், உபயோகரமாக ஏதாவது செய்யலாமே என்பது என் எண்ணம்.
அதனால், தற்கொலை செய்துக் கொண்ட அந்த இளம்பெண்ணின் மரணம் என்னை பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஆனால், அந்தத் தொலைக்காட்சித் தொடரை, பல ஆண்டுகளாக பார்க்கும் பலரும், அந்தப் பெண்ணின் மரணத்தால் கலங்கித் தான் போயினர். ஏதோ ஒரு தொலைக்காட்சித் தொடரில், 'முல்லை' என்ற கதாபாத்திரத்தில் நடித்த அந்த இளம்பெண், மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி, அனைவரையும் கலங்க அடித்தது.
அதற்கு அடுத்த சில நாட்களில், விழுப்புரம் அருகே, கந்துவட்டி கொடுமையால், மூன்று குழந்தைகளை கொன்று கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்டனர் என்று வெளியான செய்தி, என்னை உலுக்கியது.இந்த செய்திகள் மட்டுமின்றி, தினமும் ஏதாவது ஒரு பிரபலமோ அல்லது சாதாரண நபர்களோ, தங்கள் இன்னுயிரை தாங்களே மாய்த்துக் கொள்வது, ஊடகங்களில் செய்தியாக வரும் போது, அதை கேட்பவர்களுக்கு, படிப்பவர்களுக்கு மன வேதனை தருகிறது.
மரணம் என்பது இயற்கையாய் இருக்கும் பட்சத்தில்,பாதிக்கப்பட்ட அனைவருமே கொஞ்சம் கொஞ்சமாக மனதை தேற்றி, அத்துயரிலிருந்து மீண்டு வருவர். ஆனால், மரணம் தற்கொலையாக இருந்தால், பலரையும், குறிப்பாக மிக நெருங்கிய குடும்பத்தினரை உலுக்கி போட்டு விடும். அதன்பின் வாழ்நாள் முழுக்க, ஒரு வேளை உணவு கூட அவர்களால் பிரிந்த உறவை நினைக்காமல் உண்ண முடியாது.
உன்னத நட்பு கொண்டிருந்தவர்களோ, 'எங்களில் யாரிடமாவது மனம் விட்டு பேசியிருக்கலாமே; சந்தோஷத்தை மட்டுமே பகிர்ந்து விட்டு துக்கத்தை வெளியே சொல்லாமலே சென்று விட்டீர்களே...' என்று மனம் குமுறுவர். பிரபலங்களின் தற்கொலை, அவர்களின் நெருங்கிய உறவுகளுக்கு இடியாய் அமைவதுடன், அவர்களை ஆதர்ஷ புருஷர்களாகவும், புருஷியாகவும் நினைக்கும் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும், தவறான பாடத்தை கற்றுக் கொடுத்து விடும். வாழ்வில் பிரச்னை ஏற்பட்டால், தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தி விடும்.
தற்கொலை என்பது, தவறான ஒரு செயல். எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. பல பிரச்னைக்கு அது ஓர் ஆரம்பமாக மாறி விடும் அபாயம் உள்ளது. அதுவும் பிரபலங்களின் தற்கொலை, சமுதாயத்திற்கு எதிர்மறை வழிகாட்டியாக மாறும் அபாயம் நிறைந்தது.எனவே, தற்கொலை எண்ணத்தை தவிர்க்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்:
மனம் விட்டு பேசுங்கள்
கோபம், பொறுப்பு, இயலாமை, துக்கம், சோகம் போன்ற எதிர்மறையான தாக்குதல்களால் மனம் தொய்வை சந்திக்கும் போது, உங்கள் மனதை உற்சாகப் பாதைக்கு திருப்பும் நபருடன் மனம் விட்டு பேசுங்கள். நண்பர்கள், உறவுகள் பலர் இருந்தாலும், தனிப்பட்ட கருத்துக்களை யாரிடமும் வெளிப்படுத்தாமல் தனக்கு நல் வழிகாட்டியாக இருப்பர் என நினைக்கும் ஒன்றிரண்டு நபரையாவது எப்போதும் மனதில் அருகில் வைத்துக் கொள்ளுங்கள். பிரச்னைகளில் சிக்குண்டு தத்தளிப்பவர்களிடம் வேகமாக பேசி அவர்களை குற்றவாளியாக சித்தரிக்காமல், விவேகத்துடன் பேசி, பிரச்னையின் சாதக, பாதகங்களை கனிவோடு எடுத்து கூறி, அவற்றிலிருந்து வெளி வரக்கூடிய நல்வழிகளை காட்டுபவராக இருக்க வேண்டும்.
ஆறப்போடுங்கள்
எந்த ஒரு பிரச்னைக்கும் பதிலுக்கு பதில் தீர்வல்ல. யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கவே வேண்டி இருக்கும். எனவே, பதற்றம் தணிந்து, சகஜ நிலைக்கு வந்தபின் தீர்க்கமாக யோசிக்க வேண்டும். மேலும், ஒருவர் கோபாவேசமாக பேசும் போது, அடுத்தவர் அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவது, பிரச்னையை ஆறப் போகும் நிலைக்கு கொண்டு போகும்.மன அமைதி உண்டான பின் தெளிவாக யோசிக்கும் பக்குவம் உண்டாகி, தனக்கு தானே சரியான முடிவெடுக்கும் நிலைக்கு, சம்பந்தப்பட்டவர்கள் வர வாய்ப்புள்ளது.
உதவி கோருங்கள்
குழப்பமான மனநிலையில் மனச்சோர்வுடன் இருக்கும் போது உற்ற நண்பரோ, உறவினரோ இல்லாத பட்சத்தில், மனநல வல்லுனர்களை சந்தியுங்கள். ஒரு மூன்றாம் நபரிடம் சென்று என் பிரச்னையை பேசுவதா என தயங்கியே, பலரும் தவறான முடிவை எடுத்து, தம் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர். படிப்பு, தொழில், பணம், உறவு, துரோகம், பிரிவு என பலப்பல காரணங்களுக்காக மன வேதனை படும் போது, அதிலிருந்து மீள முடியாமல் தத்தளிக்கும் போது, மனநல மருத்துவர்களையோ அல்லது மனநல ஆலோசகர்களையோ அணுகுவது உங்களின் இன்னுயிரை காக்க வழிவகுக்கும்.
'பிரபலமான நான், என் பிரச்னைகளுக்காக மருத்துவர்களை நாடினால், அது வெளியில் தெரிந்து விடுமே; என் புகழ் களங்கம் அடையுமே' என்று பலரும் தவறாக கணிப்பதால் தான், மன அழுத்தம் உண்டாகும் போது மன நல மருத்துவர்களை அணுக தயங்குகின்றனர். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தர்மம் உள்ளது. மன நல வல்லுனர்கள், தம்மிடம் வருபவர்களின் தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் பகிரக் கூடாது என்பது தான் அவர்களின் தொழில் தர்மம். இதை பொதுமக்கள் உணர வேண்டும்.
சுற்றுலா செல்லுங்கள்
ஒரே மாதிரியான வாழ்க்கை முறை சலிப்பையும், சோர்வையும், மன உளைச்சலையும் தருவதற்கு அதிக வாய்ப்புஉள்ளது. எனவே, அவ்வப்போது சிறிய மாற்றம் தரும் இடங்களுக்கு சென்று வருவதை, கட்டாயமாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஓரிரு முறை குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு குறிப்பாக இயற்கை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்று வர வேண்டும். இயற்கை வளங்களுக்கு நம்மை ஆற்றுப்படுத்தும் தன்மை உள்ளது. அதனால் தான் கோடை வாசஸ்தலங்களுக்கு சென்று நாம் வந்தால், புத்துணர்வு அடைகிறோம். மலை, ஆறு, கடல், பூங்கா போன்றவை நம் மனதை ரம்மயமாக்கி, சாந்தமடையச் செய்யும்.
சுயமுன்னேற்ற பயிற்சி
அவரவருக்குப் பிடித்த ஏதாவது ஒரு பயிற்சியான விளையாட்டு, படம் வரைதல், பாட்டு பாடுதல், நடனம், செடி, செல்லப்பிராணி வளர்த்தல், புத்தகம் வாசித்தல் என்று ஏதாவது ஒன்றை தினந்தோறும் சிறிது நேரமாவது செய்வது உங்கள் மனதை உற்சாகமாக வைக்க உதவும்.
வெற்றியாளரை படியுங்கள்
நம் வாழ்க்கை பல்வேறு சவால்கள் நிறைந்தது. வயதும், அனுபவமும் கூடக்கூட மனிதனின் குணமும், நடத்தையும் தான் கற்றுக் கொள்ளும் அனுபவங்களிலிருந்து பக்குவமடையும். பல சாதனைகளை அடைந்தாலும், பணம், புகழ் சம்பாதித்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை என்பது பெரும் சாவல்கள் நிறைந்ததே. அந்தரங்க விஷயமோ, அலுவல் விவகாரமோ, பிறருடன் கருத்து வேறுபாடோ எத்தனை விதமான துயர் வந்தாலும், சுயமாக உழைத்து, முன்னுக்கு வந்த சாதனையாளர்களின் சுய சரிதையை படியுங்கள். அவற்றைப் படிக்கும் போது சாதித்தவர்கள் சந்தித்த சவால்கள், அதிலிருந்து அவர்கள் மீண்ட விதமும், படிப்பவர்களுக்கு ஓர் உற்சாக, 'டானிக்' என்றால் மிகையாகாது. காரணம், எதையும் ஒப்பிட்டு பார்க்கும் நம் மனம், வெற்றியாளரின் வாழ்க்கை பயணத்தை படிக்கும் போது தன் பிரச்னைக்கு தானே முற்றுப்புள்ளி வைக்கும் முடிவெடுக்கும்.
ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த விக்டர் பிராங்கிளின் என்ற மிக பிரபலமான எழுத்தாளர் எழுதிய, 'மேன்ஸ் சர்ச் பார் மீனிங்ஸ்' என்ற புத்தகம், அனைவரும் படிக்க வேண்டியது.. உளவியல் நரம்பியல் மருத்துவரான அவர், இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின், 'நாஜி' முகாமில், தான் அனுபவித்த துயரங்களை எழுதி இருப்பார்.அவர் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில்,'லோகோதெரபி' எனும் மனநல சிகிச்சை முறையை அவர் பின்பற்றினார். மனிதன் உயிர் வாழ, மூன்று முக்கிய அம்சங்களை குறிப்பிட்டுள்ளார். அவை, பிடித்த வேலை, அன்பு, சவால்களை வெற்றி கொண்டு வாழும் மனநிலை. இவற்றை அடிப்படையாக வைத்து, தற்கொலை எண்ணமுள்ள பலரையும் அதிலிருந்து மீண்டு வர உதவியுள்ளார்.
ஒரு நாள் நள்ளிரவு, அவரை தொலைபேசி மூலம் அழைத்த பெண், 'நான் இன்னும் சில நொடிகளில் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்' என, மிக அமைதியான சொன்னார். அப்போது, அவரின் மனதை தற்கொலையில் இருந்து மாற்ற, லோகோதெரபி அடிப்படையில் விக்டர் பிராங்கிளின் பேசினார்.உயிர் வாழ தேவையான பல காரணங்களை அவர் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக் கூறி, அந்தப் பெண்ணின் தற்கொலை முடிவில் இருந்து மாற்ற முயற்சித்தார்.
பின், ஒன்றரை மணி நேரம் கழித்து, மீண்டும் அந்தப் பெண் அழைத்தார். 'என் முடிவை மாற்றிக் கொண்டேன்' என, கூறியுள்ளார். 'உங்களின் தற்கொலை எண்ணம் மாற என்ன காரணம்' என, விக்டர் கேட்டுள்ளார். 'எனக்கென யாருமற்ற இந்த உலகில், முன்பின் அறிமுகமில்லாத நீங்கள், நான் வாழ வேண்டும் என இவ்வளவு நேரம் என்னுடன் பேசினீர்கள்.'நான் உயிர் வாழப் போராடும் ஒரு நபர் வாழும் இந்த உலகில், நானும் வாழ வழி இருக்கும் என நினைத்து, தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டேன்' என்றாராம்.
ஆம். சாக ஆயிரம் காரணங்களை சொல்லும் நமக்கு, வாழ வழி தேடினால், பல ஆயிரம் வழிகள் கிடைக்கும். நம் மேல் எய்யப்படும் அம்புகளை, சவால்கள் என எண்ணி எதிர்கொள்ள ஆரம்பித்தால், வாழ்க்கை சுவாரசியமாக மாறும்.மனிதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும். நாம் பெற்ற கல்வியை, தற்கொலை செய்ய பயன்படுத்த கூடாது என்பதே என் கோரிக்கை. நேர்மறையான ஒவ்வொரு மனிதரும், இளையோருக்கான நல்ல முன்னுதாரணமே. உதவி கோருங்கள், வாழ்வில் உயருங்கள். தற்கொலை எண்ணத்தை யாரும் வளர்க்க வேண்டாம்!
எஸ். ரமா,
மனநல ஆலோசகர் ,
தொடர்புக்கு:
இ - மெயில்: ramas_s@rediffmail.com