கோவை:உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், ரூ.8 கோடியில், 'டோபிகானா' மற்றும் சலவை தொழிலாளர் குடியிருப்பு கட்டும் பணி, முடியும் தருவாயில் இருக்கிறது.உக்கடம் மேம்பாலம் பணிக்காக, பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள 'டோபிகானா' மற்றும் சலவை தொழிலாளர் குடியிருப்பை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்காக, கழிவு நீர் பண்ணை வளாகத்தில், ஆடு அறுவைமனைக்கு பின்புறமுள்ள இடத்தில், புதிதாக, 'டோபிகானா' குடியிருப்பு உருவாக்கப்படுகிறது.ரூ.8 கோடியில், 98 வீடுகளுடன் சலவையகம் மற்றும் குடியிருப்பு உருவாக்கப்படுகிறது. 'ப' வடிவில், மூன்று பிளாக்குகளாக, தரைத்தளம் மற்றும் முதல்தளத்துடன் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. மையப்பகுதியில் துணி சலவை செய்யுமிடம் உருவாக்கப்பட உள்ளது. தண்ணீர் தொட்டி, சலவை செய்ய கற்கள் மற்றும் துணி காயப்போடுவதற்கு, தனியிடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட உள்ளது.
குடிசை மாற்று வாரியத்தினர் கூறுகையில், 'டோபிகானா' கட்டும் பணி, இன்னும் இரு மாதத்துக்குள் முடித்து, பயன்பாட்டுக்கு கொடுக்கப்படும். நீர் நிலைகளை ஆக்கிரமித்து வசிப்போருக்கு மாற்று இடம் வழங்க, உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், ரூ.30 கோடியில், 336 வீடுகள் கட்டப்படுகின்றன. இதில், 112 வீடுகளில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. செல்வபுரம் சிவாலயா தியேட்டர் சந்திப்பில், இரு பிளாக்குகளாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே குடியிருந்தவர்களுக்கே இவ்வீடுகள் வழங்கப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE