செம்மஞ்சேரி : விசாரணைக்காக, காவல் நிலையம் சென்ற வாலிபர், போலீசார், கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்களோ என்ற பயத்தில், பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், செம்மஞ்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோழிங்கநல்லுார், லால்பகதுார் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 33; பிளம்பர். திருமணமாகாத இவர், மனநலம் பாதித்து, சிகிச்சை எடுத்து வந்துள்ளார். குடிப்பழக்கத்துக்கும், அடிமையாகி உள்ளார். திருமணம் செய்து வைக்க, பெற்றோரை வலியுறுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் போதையில் இருந்த சதீஷ்குமார், பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா, 45, என்பவரிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில், அவரது வீட்டில் கல் எறிந்துள்ளார்.உஷா, செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்தார். ரோந்து போலீசார், வீட்டில் இருந்த சதீஷ்குமாரை, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
உதவி ஆய்வாளர் ஐயப்பன் விசாரித்தார். உடன், உஷா மற்றும் அவரது உறவினர்கள் நின்றனர். ஐயப்பன், சதீஷ்குமாரை எச்சரித்துள்ளார். மேலும், சதீஷ்குமார், போதையில் இருந்ததால், அவரது பெற்றோரை வரவழைத்து, எழுதி வாங்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதற்கு, உஷா குடும்பத்தார் சம்மதிக்காமல், 'இது போதாது; ஏதாவது நடவடிக்கை எடுங்கள்' என, வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து, சதீஷ்குமாரை காவல் நிலையத்தில் அமர செய்த போலீசார், அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார், கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்களோ என பயந்த சதீஷ்குமார், திடீரென, எழுந்து வெளியே சென்று, துரைப்பாக்கத்தில் இருந்து நாவலுார் நோக்கி சென்ற மாநகர பேருந்து முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.சில நிமிடத்தில், காவல் நிலையம் சென்ற சதீஷ்குமாரின் உறவினர்கள், போலீசார், சதீஷ்குமாரை அடித்து கொலை செய்துவிட்டதாக கூறி, உடலை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்வதறியாது திகைத்த போலீசார், காவல் நிலையம் எதிரே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், காவல் நிலையத்தில் இருந்து வெளியே வரும் சதீஷ்குமார், பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்வது பதிவாகி இருந்தது.இதைப்பார்த்த பின், உறவினர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப சம்மதித்தனர். போலீசார், தற்கொலை வழக்கு பதிவு செய்தனர்.இதற்கிடையில், உஷா மற்றும் அவரது குடும்பத்தார், அங்கிருந்து தலைமறைவாகினர். இவர்களை, பல இடங்களில் தேடிய போலீசார், இரவு, 11:00 மணிக்கு காவல் நிலையம் அழைத்து வந்தனர்.உஷா, சதீஷ்குமார் குடும்பத்தார் மற்றும் பேருந்து ஓட்டுனர் ஆகியோரிடம், சம்பவம் தொடர்பாக, போலீசார் எழுதி வாங்கினர். நேற்று, சதீஷ்குமார் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இருந்தாலும், உஷா, சதீஷ்குமார் உறவினர்கள் மற்றும் விசாரணை நடத்திய ஐயப்பன் உள்ளிட்ட போலீசாரிடம், சம்பவம் தொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.போதையில் தகராறு செய்வதாக, தினமும், 10க்கும் மேற்பட்ட புகார்கள் வரும். பெரும்பாலும், எச்சரித்து அனுப்புவோம். தொடர்ந்து தொந்தரவு கொடுத்தால், வழக்குப்பதிவு செய்வோம். சதீஷ்குமாரை நாங்கள் தாக்கவில்லை. அவர், போதையில் இருந்ததால், பெற்றோரை வரவழைத்து, எழுதி வாங்க முடிவு செய்து, அவரை காவல் நிலையத்தில் அமர வைத்தோம். அவரை, கைது செய்யும் எண்ணமில்லை. திடீரென, எழுந்து, பேருந்து முன் பாய்வார் என, நாங்கள் நினைக்கவில்லை.செம்மஞ்சேரி போலீசார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE