கோவை:பள்ளி மாணவிகளுக்கான இலவச கூடைப்பந்து பயிற்சி வரும், ஜன., 1ம் தேதி முதல் நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள, கூடைப்பந்து மைதானத்தில் நடக்கவுள்ளது.கோவை, ஜெயலட்சுமி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், கடந்த ஏழு ஆண்டுகளாக கூடைப்பந்து விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதன் ஒரு பகுதியாக ஏழை, எளிய மாணவிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் விதமாக வரும், ஜன., 1ம் தேதி முதல், நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள கூடைப்பந்து மைதானத்தில், இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில், 6 வயது முதல் 12 வயதுடைய மாணவிகள் பங்கேற்கலாம்.இது குறித்து, அகாடமியின் செயலாளர் பாபு விவேகானந்தன் கூறுகையில்,''அரசு பள்ளிகளில் கூடைப்பந்து விளையாட்டு மீது, ஆர்வம் கொண்டுள்ள மாணவிகளுக்கு மைதானம், விளையாட்டு உபகரணங்கள், பயிற்சியாளர்கள் இல்லாத காரணத்தால், கனவு நினைவேறாமல் போகிறது. அவர்களின், விளையாட்டு திறனை வெளிக்கொண்டு வரும் நோக்கில், இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சாதனை படைக்கும் மாணவிகளுக்கு, பல கல்லுாரிகள் இலவச படிப்பு, தங்கும் விடுதி வசதி ஏற்படுத்தி தருகின்றன. இதனை பயன்படுத்தி, மாணவிகள் திறன்பட செயல்பட வேண்டும்,'' என்றார்.மேலும் விபரங்கள் அறிய, 98423 32832 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE