நாளெல்லாம் இதய கருவறையில் உன்னை வைத்து ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் செய்யும் பக்தனாய், நீயே எனக்குள் எல்லாமுமாய் இருக்கிறாய் என பித்தனாய், சுவாமியே சரணம் ஐயப்பா என்று உன்னையே உச்சரிக்கும் சித்தனாய்... சரணம் விளித்தால் மரணம் இல்லை, சாஸ்தா நாமம் அருளின் எல்லை... என உருகும் பக்தர்களில் இன்னிசை பக்தரான பாடகர் வீரமணி ராஜூ, சுவாமி ஐயப்பன் மகிமை குறித்து பேசி நெகிழ்கிறார்...'சபரிக்கு வந்து ஐயப்பனை பார்க்கவில்லை என வருத்தப்படாதே பம்பை எல்லைக்கு நீ வந்தாலே ஐயப்பன் உன்னை பார்த்து விடுவான்' என நம்பியார் கூறுவார்.
அவர் அங்கு 3 நாட்கள் தங்கும் போது ஒரு முறை கூட சுவாமியை தரிசிக்க மாட்டார். இருமுடி கட்டி 18 படி ஏறும் போது, கிளம்பும் போது மட்டும் தான் தரிசிப்பார்.'நீ எவ்வளவு முறை வேண்டுமானாலும் ஐயப்பனை பார்க்கலாம் ஆனால் அவர் ஒரு முறை தான் நம்மை பார்ப்பார்' என கூறுவர். 42 நாள் விரதம் குருசாமிகள் நிர்ணயம் செய்தது இல்லை. ஐயப்பன் தன் வாயால் கூறியது தான் விரத முறை. 'சுவாமியே சரணம் ஐயப்பா என பக்தியோடு ஒரு முறை கூறுபவர்கள் வீட்டில் 27 ஆயிரம் தலைமுறை இருப்பேன்' என ஐயப்பன் பரசுராமனுக்கு சத்தியம் செய்துள்ளார்.பந்தள அரண்மனை அமைச்சருக்கு ஒருவர் எழுதிய 'பூத நாத உபாக்யானம்' ஓலை சுவடியில் 'பரசுராமன் பிரதிஷ்டை செய்த 18 படிகளுக்கு என்னை விட சக்தி' அதிகம் என ஐயப்பன் கூறியதாக குறிப்பு உள்ளது.சபரியில் ஐயனை வேண்டினால் நினத்தது நடக்கும் என நம்பிக்கை வேண்டும். சபரியில் எல்லாம் தெரியும் என நாம் நினைக்க கூடாது. ஒரு முறை நான் சென்ற போது கூட்டம் அதிகம் இருந்தது. சபரி பீடத்தில் இருந்து இடது பக்க வழியில் செல்லலாம் என நண்பர்களுடன் சென்றேன்.திடீரென பாதை இருட்டாக மாறி வழியின்றி போனதால் ஐயனை வேண்டி திரும்பி பார்த்த போது வந்த பாதையும் இல்லை. அந்த பக்கம் வந்த கழுதையை பின் தொடர்ந்து கூட்டம் இருந்த இடத்திற்கு மீண்டும் வந்தேன்.அங்குள்ள டீ கடைக்காரர் என்னை அழைத்து '1 மணி நேரம் முன் இவ்வழியே சென்றீர்களே' என கேட்டார். கூட்டமாக இருந்தால் ஐயனை காண சென்று வழி தவறி கழுதையை தொடர்ந்து மீண்டும் இங்கு வந்தேன் என்றேன். 'நீங்கள் சென்ற காட்டு வழியில் வன விலங்குகள் இருப்பதால் கழுதை வந்திருக்காது என்றார் அவர்.இல்லை வந்தது என கூறியதும் 'வந்த கழுதை கூட்டத்தை தாண்டி சென்றிருக்காது காட்டுங்கள்' என்றார். கழுதையை தேடுகிறேன் கண்களில் சிக்கவில்லை. ஆனால், காலடி தடம் மட்டும் இருந்தது. கடைக்காரை அழைத்து காலடி இருக்கிறது என்றேன். 'கடை அருகில் கழுதை வந்தும் என் கண்ணில் படவில்லை உடனே காலடியை வணங்குங்கள்' என்றார்.இது ஐயப்பன் திருவிளையாடல் என அப்போது தான் புரிந்தது.கழுதை காலடி மண்ணை நெற்றியில் பூசி மெய்சிலிர்த்தேன். எல்லாம் தெரியும் என்ற ஆணவம் அடக்கவே ஐயன் விளையாடியதை உணர்ந்தேன், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE