கோவை:சமூக நலத்துறையின் கீழ் வெளியூர் பெண்களுக்கான, அரசு மகளிர் தங்கும் விடுதி கட்டுமான பணி, விரைவில் துவங்கவுள்ளது. பொதுவாக, சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு பணிக்கு வரும் பெண்களுக்கு, பெரும் சிக்கலாக இருப்பது தங்கும் இடம் தான்.200 ரூபாய் கட்டணத்தில், அரசு மகளிர் விடுதி திட்டத்தை, கடந்த பல ஆண்டுகளாக சமூக நலத்துறையின் கீழ், அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், பணிக்கு செல்லும் பெண்கள் சென்னையில், 300 ரூபாய், பிற மாவட்டங்களில், 200 ரூபாய் மட்டும் கட்டணமாக செலுத்தி தங்கிக்கொள்ளலாம். உணவு, பராமரிப்பு செலவுகளை தங்கியிருப்போருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். கோவையில் பூமார்க்கெட் பகுதியில், இவ்விடுதி செயல்பட்டு வருகிறது. சொந்த கட்டடம் கட்ட, அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1.01 கோடி ரூபாய் ஒதுக்கியது.
இதற்காக, வெள்ளக்கிணறு பகுதியில், நிலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இவ்விடத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததால், நீண்ட இழுபறிக்கு பின் துடியலுார் பகுதியில், 90 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் தங்கமணியிடம் கேட்டபோது, ''துடியலுார் பகுதியில் அரசு மகளிர் விடுதி கட்ட, மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில், பொதுப்பணித்துறை மூலம் கட்டுமான பணிகள் துவங்கவுள்ளன. இதில், 50 பேர் தங்கிக்கொள்ளலாம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE