திருப்பூர்:மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் இறைச்சி கழிவுகளை அகற்றும் பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படும். இதனை பெற்றுக் கொள்ள தனியார் நிறுவனம் முன் வந்துள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 500க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இவற்றிலிருந்து தினமும் ஏறத்தாழ, 100 டன் இறைச்சி கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இவை முறையாக அகற்றப்படாமல் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.அவ்வகையில், நெல்லையை சேர்ந்த தனியார் நிறுவனம் கழிவுகளை பெற்றுக் கொள்ள முன் வந்துள்ளது. இறைச்சி கழிவுகளை சேகரித்து உரம் மற்றும் மீன்களுக்கு தீவனமாக மாற்றும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.வரும் ஜன., மாதம் முதல் இந்த நிறுவனம் களமிறங்கி, இறைச்சி கழிவுகளைப் பெறவுள்ளது. இது குறித்தான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சியில் நடந்தது. கமிஷனர் சிவகுமார், மாநகர நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பிச்சை, ராமச்சந்திரன் ராமகிருஷ்ணன் மற்றும் இறைச்சி கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.கடைகளிலிருந்து இறைச்சி கழிவுகளை சுகாதாரமான முறையில் அகற்றவும், அதை தனியார் நிறுவனத்திடம் வழங்கும் முறை குறித்தும் கூட்டத்தில் விளக்கப்பட்டது. இறைச்சி கழிவு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் உரிய வகையில் ஒத்துழைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE