சென்னை:சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அடுத்த கட்ட பணிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.
சென்னை - சேலம் இடையிலான பயண நேரத்தை குறைக்கும் வகையில் 277 கி.மீ.க்கு பசுமை வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு மட்டும் 3000 கோடி ரூபாய் உட்பட திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.இதற்காக சேலம் தர்மபுரி காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் 4693 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் எட்டுவழி சாலை பணிக்கு தடை விதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.வழக்கை விசாரித்த நீதிமன்றம் சாலை பணியை தொடர தடை விதித்தது; நிலங்களை திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.இதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை ஓராண்டுக்கு மேலாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.அதன்படி நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய அறிக்கை வெளியிட்டு நிலங்களை கையகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சாலை பணியை தொடர்வதற்கான அடுத்தகட்ட வேலைகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக தீர்ப்பில் உள்ள அம்சங்கள் குறித்து மத்திய அரசு வக்கீல்களிடம் சட்ட ஆலோசனை கேட்கப் பட்டு உள்ளது.புதிதாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்புக்கான முன்னேற்பாடுகளும் துவக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை மாநில சுற்றுச்சுழல் துறையிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. பின்னர் சுற்றுச் சூழல் துறை வாயிலாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும்.இறுதியாக மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட உள்ளது. சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக சாலை பணியை துவங்க தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் திட்டமிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE