சிங்கப்பூர்:தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரகாஷ் கிரிசாமி என்பவர் மலேசியாவில் வசிக்கிறார். இவர் அண்டை நாடான சிங்கப்பூரில் இம்ரான் முகமது ஆரிப் என்பவருக்கு 'ஹெராயின்' என்ற போதைப் பொருளை கொடுத்து விட்டு நண்பர் யாகஸ்வரனுடன் திரும்பும் போது மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் மூவருக்கும் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மூவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விபரம்:பிரகாஷ் கிரிசாமி தன்னிடம் ஒருவர் கொடுத்தனுப்பிய சிகரெட் பாக்கெட்டில் போதைப் பொருள் இருந்தது தெரியாது என கூறியுள்ளார். சிகரெட் பாக்கெட்டின் எடை அதிகமாக இருந்ததால் அவர் தெரிந்தே ஹெராயினை எடுத்துச் சென்றதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஹெராயின் சிகரெட்டை கொண்டு போய் கொடுக்க அதிக பணம் வழங்கப்பட்டதையும் வழக்கத்திற்கு மாறாக ஒரு கட்டடத்தில் சிகரெட் பாக்கெட் தரப்பட்டதையும் தீர்ப்பு சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால் இவற்றுக்கு வலுவான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே பிரகாஷ் கிரிசாமி சாதாரண சிகரெட் என கருதியே ஹெராயின் சிகரெட் பாக்கெட்டை கொடுத்துள்ளார் என இந்த நீதிமன்றம் கருதுகிறது.
மேலும் சாதாரண சிகரெட்டிற்கும் ஹெராயின் சிகரெட்டிற்கும் இடையிலான எடை வித்தியாசம் மிகக் குறைவாகவே உள்ளது. அதனால் அதிக எடை என்ற கேள்வியே எழவில்லை. சிங்கப்பூரில் சிகரெட்டை இப்படித் தான் வினியோகிக்க வேண்டும் என விதிமுறை ஏதும் இல்லை. அதனால் பிரகாஷ் கிரிசாமியின் மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இம்ரான் முகமது ஆரிப் யாகஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகளை திருத்துமாறு போலீசுக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE