திருப்பூர் பாண்டியன் நகர் அருகே, 'ஸ்ரீதேவி' என்ற பெயரில் அமைந்துள்ளது அந்த டீக்கடை. ஆவி பறக்க டீ தயாரித்து மோகன்குமார், 63. பொதுவாக டீக்கடையில் விதவிதமான, 'ஸ்நாக்ஸ்'கள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் தின்பண்டங்களை காட்டிலும், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் திருக்குறள் புத்தகங்களே வருவோரை வசீகரிக்கின்றன.இது டீக்கடையா இல்லை நுாலகமா? என ஒரு கணம் திகைத்துபோகும் அளவுக்கு, கடையை சிறு நுாலகமாக மாற்றி வைத்திருக்கிறார். இடையிடையே தொங்கவிடப்பட்ட சிலேட், கரும்பலகைகளில் எழுதப்பட்ட திருக்குறள், பழமொழிகள் வாசிப்பு மற்றும் சிந்தனையை துாண்டிவிடுவதாக சொல்கின்றனர் வாடிக்கையாளர்கள்!ஒன்றே முக்கால் அடிக்கொண்ட திருக்குறளை மக்களுக்கு இரண்டே நிமிடத்தில் பதிய வைத்து வரும் மோகன்குமாரிடம் பேசினோம்...படிப்பு வராததால், 7 வயதிலே நீலகிரி பேக்கரியில் வேலை பார்த்தேன். திருப்பூரில் சுயமாக டீக்கடை வைத்தேன். படித்தது, 2ம் வகுப்பு என்றாலும், செய்தித்தாளில் வரும் துணுக்குகள், ஒரு வரி வாக்கியங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம்.பின், நானே எழுத துவங்கினேன். மனிதனை நெறிப்படுத்த தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளதால் அதன்மீது, எனக்கு ஈர்ப்பு அதிகம். என்னை வழிநடத்துவதும் அதுவே. இதை வளரும் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டி, அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேரம் கிடைக்கும் போது, 3 முதல், 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்பெடுக்க செல்வேன்.முதன்முதலாக, 'மனதின் குரல்' என்ற நுாலை எழுதி சமீபத்தில் வெளியிட்டுள்ளேன். சாமானிய மனிதனின் சுயமுன்னேற்றத்திற்கு தேவையானை கருத்துக்களை பதிவுசெய்துள்ளேன். படிக்கும் ஒருவர் தன் வாழ்க்கையில் நன்னெறியில் நடந்தால் அதுவே எனக்கு போதும்... என்றார் நெகிழ்ச்சியாக.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE