திருப்பூர்:துாய்மை காவலரின் மாத சம்பளம், 2,600 ரூபாயில் இருந்து, 3,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.துாய்மை காவலர் திட்டம், 2015ல் அறிமுகம் செய்யப்பட்டது. மாதம், 2,600 ரூபாய் சம்பளத்தில், துாய்மை காவலர் நியமிக்கப்பட்டனர். தள்ளுவண்டி, சீருடை, ஷூ, கையுறை உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டது.தலா, 150 வீடுகளுக்கு ஒருவர் என்ற வகையில், 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகளில், 66 ஆயிரத்து, 025 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, 'பேட்டரி'யில் இயங்கும் சிறிய ஆட்டோ வாகனம் வழங்கப்பட்டுள்ளது.தினக்கூலி, 100 ரூபாய் என்பது மிகவும் குறைவாக இருப்பதால், ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். அதன்படி, தமிழக முதல்வரும், ஊதிய உயர்வு வழங்கப்படுமென, சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, 2,600 ரூபாயாக இருந்த மாதசம்பளம், இம்மாதம் முதல், 3,600 ரூபாயாக உயர்த்தி, அரசாணை வெளியாகியுள்ளது. இதனால், துாய்மை காவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாவட்ட ஊராட்சி, ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி என முறையே, 55:37:8 என்ற விகித்தில், மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து, இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு, ஆண்டுக்க, 206.04 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதால், 285.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE