திருப்பூர்:பல நுாற்றாண்டுக்கு முந்தைய செய்திகளை, தன்னகத்தே கொண்டுள்ள சுக்ரீஸ்வரர் கோவில் கல்வெட்டு, பராமரிப்பின்றி மண்ணில் கிடப்பதால், பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.திருப்பூர் நகரை ஒட்டியுள்ள, சர்க்கார் பெரியபாளையத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில், சுந்தரரால் பாடல்பெற்ற தலம் என்பதால், எட்டாம் நுாற்றாண்டில் தொடர்புடைய கோவில் என்று கண்டறியப்படுகிறது.கோவில் வளாகத்தில், சுக்ரீஸ்வரர், ஆவுடைநாயகி சன்னதி பிரதானமாக அமைந்துள்ளது. சுற்றுப்பிரகாரத்தில், கன்னிமூல கணபதி, தட்ஷிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னதிகளும், கருவறைக்கு நேர் எதிரே பத்திரகாளியம்மன் கோவிலும் அமைந்துள்ளது.தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் வளாகத்தில், பழமையான கல்வெட்டுகளும் அமைந்துள்ளன.
கோவில் சுற்றுப்பிரகாரத்திலும், கல்வெட்டு செய்திகள் உள்ளன. கோவிலில் கண்டறியப்பட்ட, சில கல்வெட்டுகள், கி.பி.,1,200- ம் ஆண்டை சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.பழமையான கோவில் வளாகத்தில், தகவல்களை சுமந்துள்ள நிலைப்படி போன்ற கல்வெட்டு ஒன்று, தரையில் கிடக்கிறது. அந்த இடம்தான், கோவில் பாத்திரங்கள் கழுவி சுத்தம் செய்யும் இடமாக இருப்பதாக, பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பக்தர்கள் சிலர் கூறியதாவது:புகழ்வாய்ந்த சுக்ரீஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தவே, இறைவனின் அனுக்கிரகம் வேண்டும். புனிதமான இக்கோவிலை தொல்லியல்துறை பராமரிக்கிறது. கோவில் வளாகத்தின் தென்கிழக்கு பகுதியில், தரையில் கிடக்கும் கல்வெட்டு பாதுகாக்கப்பட வேண்டும். கல்வெட்டு தகவலை அறிந்து, அதையும் ஆவணமாக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE