சென்னை:''தமிழக போக்குவரத்து துறையில் நடக்கும் ஊழல்களுக்கு காரணமான, போக்குவரத்து துறை கமிஷனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்,'' என, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள்சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து, சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாசலம் அளித்த பேட்டி:தமிழக போக்குவரத்து துறை, வாகன உரிமையாளர்களிடம் கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.அதாவது, நாட்டில், 69 நிறுவனங்கள் தயாரித்துள்ள வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த, பத்தாண்டுகளுக்கு முன்பே, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால், தற்போதைய கமிஷனர், சில நிறுவன தயாரிப்புகளுக்குமட்டுமே அனுமதி வழங்கியுள்ளார். இதனால், 800 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரை விற்ற கருவிகள், தற்போது, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. இதனால், வாகன உரிமையாளர்களுக்கு, 8,000 ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது.
அதேபோல, ஒளிரும்பட்டைகள் தயாரிப்புக்கு, மத்திய அரசு, 11 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால், தமிழகத்தில், இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதிஅளிக்கப் பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள, 13 லட்சம் வாகனங்களுக்கு, இவற்றைப் பொருத்துவதை உறுதி செய்ய, ஜூலையில் துவங்கப்பட்ட தனியார் இணையதளத்துக்கு, தமிழக போக்குவரத்து துறை, ஆகஸ்டில் அனுமதி அளித்துள்ளது.
இதனால், போக்குவரத்து துறையில், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெறுகிறது. அதுபோல் எதுவும் நடக்கவில்லை என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார்.எனவே, இந்த முறைகேட்டுக்கு காரணமான கமிஷனர், துணை, உதவி கமிஷனர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு, முருகன் வெங்கடாசலம் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE