கோவை;''மாணவர்களின் தவறுகளை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுவது போல, சமூகத்தின் தவறுகளை, எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல், சுட்டிக்காட்டும் பணியை, 'தினமலர்' நாளிதழ் சிறப்பாக மேற்கொள்கிறது,'' என, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்தார்.'தினமலர்' நாளிதழ் சார்பில், 'லட்சிய ஆசிரியர் விருது 2020' வழங்கும் விழா, கோவை சுந்தராபுரம், 'தினமலர்' அலுவலக லோட்டஸ் ஹாலில் நேற்று நடந்தது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 10 ஆசிரியர்களுக்கு, நேற்று விருது வழங்கப்பட்டது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பேசியதாவது:ஒரு வகுப்பறையில் தான், நாட்டின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வகுப்பறையை சிறப்பாக கையாளும் ஆசிரியர்களை தேர்வு செய்து, உரிய நேரத்தில் விருது வழங்கும், 'தினமலர்' நாளிதழுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.தற்போதுள்ள மாணவர்கள் அறிவாளிகள். அவர்களை கையாளும் மந்திரக்கோலாக, ஆசிரியர்கள் மாற வேண்டும். ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டும் தான், மாணவர்களின் கனவுகளுக்கு விதைகளை துாவ முடியும். பாடப்புத்தகத்தை தாண்டி, பல தகவல்களை தேடி கற்பிப்பது அவசியம்.மாணவர்களின் உளவியலை புரிந்து கொள்ளும் ஆசிரியர்களால், வகுப்பறை சூழலை சிறப்பாக கட்டமைக்க முடியும். எந்த கடினமான சூழலையும் கடக்க, விடாமுயற்சியுடன் போராடும் குணத்தை மாணவர்களுக்கு சொல்லி தர வேண்டும்.மாணவர்களின் தவறுகளை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுவது போல, சமூகத்தின் தவறுகளை, எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல், சுட்டிக்காட்டும் பணியை, 'தினமலர்' நாளிதழ் சிறப்பாக மேற்கொள்கிறது. சமூக வலைதளங்களின் பங்களிப்பு அதிகரித்து விட்ட சூழலில், செய்தியின் உண்மைத்தன்மை உறுதிசெய்யும் நாளிதழ்களின் பணி அளப்பரியது.இவ்வாறு, அவர் பேசினார்.விருது பெற்ற ஆசிரியர்கள்l பாக்கியலட்சுமி,துணை முதல்வர், ஆர்.வி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூலுார்.l சுகந்தி,முதுகலை ஆசிரியர், ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை.l விஜயலட்சுமி,தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, காந்திமாநகர்.l செந்தில்குமார்,முதுகலை ஆசிரியர், என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி.l இந்திராணி,பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, இடுவம்பாளையம்.l சுரேஷ்,முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டி.l கீதா,பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி, ஏரிப்பட்டி.l பிரேமா,தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேலுார்.l கண்ணபிரான்,இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ராகல்பாவி.l செந்தில்வேலு, முதுகலை ஆசிரியர்,எஸ்.கே.என்., அரசு மேல்நிலைப்பள்ளி, பீடம்பள்ளி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE