புதுடில்லி : அவதுாறு வழக்கில், அஜித் தோவல் மகனிடம், காங்., மூத்த தலைவர், ஜெய்ராம் ரமேஷ் நேற்று மன்னிப்பு கோரினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவல் குறித்து, 'தி கேரவன்' இதழ், கடந்த ஆண்டு, ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில், கரீபியன் கடல் பகுதியில் உள்ள, 'கேமன்' தீவுகளில், விவேக் தோவல், நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும்; 2016ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், அது துவங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுஇருந்தது.
இதை வைத்து, விவேக் தோவல் பணமோசடியில் ஈடுபட்டதாக, காங்., மூத்த தலைவர்
ஜெய்ராம் ரமேஷ், கடுமையாக விமர்சித்தார்.
அந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த விவேக், கேரவன் பத்திரிகைக்கும், ஜெய்ராம் ரமேஷுக்கும் எதிராக, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில், அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை, கூடுதல் தலைமை மேஜிஸ்திரேட் சச்சின் குப்தா முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்பு கோரி, அறிக்கை சமர்ப்பித்தார். அதில், கூறப்பட்டுள்ளதாவது: பொதுத் தேர்தல் நேரம் என்பதால், விவேக் தோவலுக்கு எதிராக, பல்வேறு குற்றச்சாட்டுகளை நான் அப்போது முன்வைத்தேன்.

அப்போது வெளியான கட்டுரை அடிப்படையில் மட்டுமே, நான் கருத்துகளை முன்வைத்தேன். அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்திருக்கலாம். என் கருத்துக்கள் புண்படுத்தி இருக்குமானால், அதற்காக, உங்களிடமும் உங்கள் குடும்பத்தினரிடமும், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, விவேக் தோவல் கூறுகையில், ''ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்பு கேட்டுவிட்டார். நாங்களும் அதை ஏற்றுவிட்டோம். கேரவன் பத்திரிகைக்கு எதிரான அவதுாறு வழக்கு தொடரும்,'' என்றார். இதையடுத்து, ஜெய்ராம் ரமேஷ் மீதான வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE