விவசாயிகள் 21 நாட்களுக்கும் மேலாக, போராடிக் கொண்டிருக்கின்றனர்; வேளாண் விரோதச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை. தமிழக முதல்வர், இ.பி.எஸ்., அந்த சட்டங்களால் ஆபத்து இல்லை என வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்
'சீனாவுல ஏதாச்சும் ஒண்ணு நடந்தா, இங்கே கொடி பிடிச்சு நிக்கிற உங்களுக்கு, டில்லி விவகாரம் முகுதுல அரிப்பை தானே ஏற்படுத்தும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.
வேல் யாத்திரையின் போது, கோவை, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிகப் பெரிய அளவில் எழுச்சி காணப்பட்டது. அது, தமிழக அரசியல் கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழக பா.ஜ., தலைவர் முருகன்
'அப்போ, அந்த ஐந்து தொகுதிகளில் மட்டும் தான், பா.ஜ., போட்டியிடப் போகிறதா...' என, சந்தேகத்துடன் கேட்கும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் அறிக்கை.
'ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., உயர்கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம்' என்று வல்லுனர் குழு அரசுக்கு பரிந்துரை அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமூக நீதியை ஒழித்துக் கட்டும் இந்தப் பரிந்துரையை அரசு ஏற்கக்கூடாது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
'இது போன்ற பரிந்துரையை, வேலையில்லாத யாராவது தான் செய்திருப்பர்; அரசு நியாயமாக செயல்படும் என நம்புங்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.
மத்தியில் ஆளும், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., அரசுக்கு, 'மாணவர்கள் படித்து வேலைக்கு போகக் கூடாது; மீண்டும் வர்ணாசிரம முறையை நாட்டில் அமல்படுத்த வேண்டும்; அதற்காக, இட ஒதுக்கீடு, சமூக நீதி போன்றவற்றை ஒழிக்க வேண்டும்' என்பது தான் எண்ணம்.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி
'இளைஞர்கள் படித்து நல்ல வேலைக்கு செல்லக் கூடாது என்பது, உங்களைப் போன்றவர்களுக்கான எண்ணமாச்சே... 'உல்டா'வாக கூறுகிறீர்களே...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து நல்லது செய்தோர் நிறையப் பேர் உண்டு. புதிய கட்சியை, நான் கூடத் துவங்கலாமா என்று யோசிக்கிறேன்.
- சினிமா இயக்குனர் பார்த்திபன்

'ரஜினியைத் தானே சீண்டிப் பார்க்கிறீர்கள்...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், சினிமா இயக்குனர் பார்த்திபன் பேச்சு.
மக்களைப் பற்றி, மத்திய அரசு கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. அதனால் தான் தொடர்ந்து, பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
- காங்., - எம்.பி., திருநாவுக்கரசர்
'காங்., ஆட்சியிலும், இதுபோல நடந்துள்ளதே... அப்போது நீங்கள் கண்டுகொள்ளவில்லையே...' என, கேட்கத் தோன்றும் வகையில், காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் அறிக்கை.
விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களை இயற்றியுள்ள பிரதமர் மோடியை கண்டித்து, டில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு நான் செல்ல முயன்ற போது, போலீசார் தடுத்தனர். போலீசாருக்கு, 'டிமிக்கி' கொடுத்து, மதுரை விமான நிலையம் வழியே டில்லி சென்று, போராட்டத்தில் பங்கேற்றேன்.
- தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு
'நீங்கள் சென்றதால், போராட்டம் தீவிரமடைந்ததா அல்லது நின்று விட்டதா... நீங்க போனது வேஸ்ட்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி.
கந்துவட்டிக்கு எதிராக சட்டம் இருந்தும், தமிழக அரசு அதை அமலாக்குவதில்லை. அதன் காரணமாகவே, கந்து வட்டிக் கொடுமைகளும், பதைக்க வைக்கும் தற்கொலைகளும் தொடர்கின்றன.
- மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன்
'உண்மை தான். சட்டம் நிறைய இருக்கின்றன; அதை சரியாக அமல்படுத்துவதில்லை...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் அறிக்கை.
இந்த நெருக்கடியான காலத்திலும் மக்களின் அடிப்படை தேவைகளை நசுக்கும், 'பாசிச' போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பதும்,- அடிமைகள் அதை வேடிக்கை பார்ப்பதும் வேதனை தருகிறது. மக்களின் வலிக்கு மருந்திடாமல், சமையல் காஸ் விலையேற்றத்தை கண்டிக்கிறோம்.
- தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின்
'இந்த நெருக்கடியான நேரத்திலும், அரசியல் செய்யலாமா...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.
கேரள உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டுகள். கேரள மக்கள், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., மீது நல்லெண்ணம் கொண்டுள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
- தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன்
'மூன்றாவது இடத்திற்கு கீழே, பா.ஜ., வந்துள்ளது. அதற்காக பாராட்டுறீங்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE