கோல்கட்டா: மேற்கு வங்க அரசியல் வரலாறு அமித் ஷா முழுவதும் தெரியவில்லை என திரிணமுல் காங்., மூத்த தலைவரும் எம்.பி.,யுமான கம்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திரிணமுல் காங்., கட்சியில் இருந்து ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஒரு எம்.பி., என 10 பேர் பா.ஜ.,வில் இணைந்தனர்.
இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‛தற்போது நடப்பது ஒரு தொடக்கம் தான். விரைவில் மேற்கு வங்கத்தில், அரசியல் சுனாமி வீசப் போகிறது.அடுத்த ஆண்டு, சட்டசபைக்கு தேர்தல் நடப்பதற்கு முன், திரிணமுல்லில், மம்தா பானர்ஜி மட்டுமே இருப்பார். நீங்கள் (மம்தா) இதற்கு முன் எந்தக் கட்சியில் இருந்தீர்கள். காங்கிரசில் இருந்து வெளியே வந்து தானே, இந்தக் கட்சியைத் துவக்கினீர்கள்,' எனப் பேசினார்.

அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான கல்யாண் பானர்ஜி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: மேற்கு வங்க அரசியல் வரலாற்றை முழுவதுமாக அமித் ஷாவுக்கு தெரியாது. அவர் புரிந்து கொள்ளவும் இல்லை. அமித் ஷா மக்களை தவறாக வழிநடத்துகிறார். காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்த மம்தா பானர்ஜி, எந்தக் கட்சியிலும் சேரவில்லை. அவர் தொடங்கியதுதான் திரிணமுல் காங்கிரஸ் கட்சி. எதற்காக தனிமனிதர் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள், அவர்களை அவமானப்படுத்துகிறீர்கள்.

மம்தா பானர்ஜி முதல்வராக வர வேண்டும் என்ற பேராசை பிடித்தவர் அல்ல, மக்கள் வாக்களித்து அவரை முதல்வராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டவுடன் நீங்கள் விவசாயிகளின் நண்பராகவிட முடியாது. விவசாயிகளுக்காக உண்மையாக உழைப்பவர்கள்தான் நண்பராக இருக்க முடியும். மம்தா பானர்ஜி 3வது முறையாக ஆட்சிக்கு வருவார். மக்கள், மம்தா மீது உள்ளார்ந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மற்றவர்களின் குடும்பத்தை மையமாக கொண்ட அரசியல் பற்றி அமித் ஷா பேசுகிறார். இவ்வாறு கல்யாண் பானர்ஜி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE