ஈரோடு: கட்டுப்பாடுகளுடன் வைகுண்ட ஏகாதசி விழா நடத்தி கொள்ள, ஈரோடு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், இவ்வாண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடத்துவதற்கு கோவில் நிர்வாகம், கலெக்டர் கதிரவனிடம் அனுமதி கேட்டது. ஆனால், கோவிலில் விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்காத காரணத்தால் அவர் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன், ஆர்.டி.ஓ., சைபுதீன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நேற்று, ஆர்.டி.ஓ., சைபுதீன், டி.எஸ்.பி., ராஜூ உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக கோவிலில் ஆய்வு செய்தனர். பின்னர், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா நடத்த அனுமதித்தனர். அதில், 'பரமபத வாசல் திறப்பின் போதும், சுவாமி பரமபத வாசல் வழியாக பிரவேசம் செய்யும் போதும், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். சுவாமி பரமபத வாசலை கடந்து விழா மண்டபத்துக்கு வந்த பின்பு, காலை, 6:00 மணிக்கு மேல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும். அரசின் பாதுகாப்பு வழிமுறைகளின் படி வரும், 24 மதியம், 12:00 மணி முதல், 25 இரவு வரை, கோவில் முன்பு, பூக்கடை, பூஜை பொருள் விற்பனை கடைகள் வைக்க அனுமதிக்க கூடாது' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, பகல் பத்து உற்சவம் நடந்து கொண்டிருக்கிறது. 24ல் மோகினி அலங்காரம், 25 அதிகாலை பரமபத வாசல் திறப்பு விழா நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE