ஈரோடு: ஆயுர்வேத டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்யலாம் என்பது உட்பட முக்கிய பிரச்னைகள் குறித்து வரும், 28 ல் நடக்க உள்ள ஐ.எம்.ஏ., மத்திய செயற்குழு கூட்டத்தில் முடிவு அறிவிக்க உள்ளனர்.
இதுபற்றி, இந்திய மருத்துவ சங்க (ஐ.எம்.ஏ.,) அகில இந்திய துணை தலைவர் ராஜா கூறியதாவது: இந்திய மருத்துவ குழுமம், ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதித்துள்ளது. இதனால், மக்கள் பாதிக்கப்படுவர் எனக்கூறி போராடி வருகிறோம். எம்.பி.பி.எஸ்., - எம்.எஸ்., படிப்பவர்கள், 10 ஆண்டு படிப்பு, அனுபவத்துக்குப்பின், அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர். அலோபதி முறையில், ஒவ்வொரு உறுப்புக்கும் தனி நிபுணர்களாக படித்து, சிகிச்சை வழங்குகின்றனர். இந்தியாவில் இதுபோன்ற அலோபதி சிகிச்சை தரமாக, குறைந்த கட்டணத்தில் செய்வதால், உலகில் பல நாடுகளில் இருந்து, 'மெடிக்கல் டூரிசமாக' பலரும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதுபோன்று, ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய துவங்கினால், உயிர்கள் மீதான அச்சுறுத்தலாக கருதி, வெளிநாடுகளில் இருந்து வருவோர் முற்றிலும் பாதிப்பர். இதுபற்றி, மத்திய, மாநில அரசிடம் தெரிவித்துள்ளோம். மாநில அரசின் மருத்துவ பாடத்திட்டத்தில், தற்போது எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை, என தமிழக முதல்வர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் கூறி உள்ளனர். மத்திய அரசிடம், இதுபற்றி முறையிட்டுள்ளோம். வரும், 28ல் ஐ.எம்.ஏ.,வின் மத்திய செயற்குழு கூட்டம் கூடுகிறது. அதில், இப்பிரச்னை குறித்து முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE