வாழப்பாடி: நான்கு ஆண்டுக்கு பின், ஆணைமடுவு அணை நீர்மட்டம், 60 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், வசிஷ்ட நதியில் தண்ணீர் திறக்க, விவசாயிகள் வலியுறுத்தினர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி, அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதி குறுக்கே, புழுதிக்குட்டையில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும்படி, 263.86 ஏக்கரில், ஆணைமடுவு அணை கட்டப்பட்டுள்ளது. அதன்மூலம், 5,011 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. 5 ஆண்டாக அணை நிரம்பாததோடு, வசிஷ்ட நதியில் உபரிநீர் திறக்கப்படாததால், நீர்வரத்து இல்லாமல் புதர்மண்டியுள்ளது. ஆனால், இரு மாதமாக பெய்து வரும் பருவ மழையால், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருகிறது. இதனால், செப்., 27ல், 28.21 அடியாக இருந்த நீர்மட்டம், நவ., 3ல், 47.57 அடி, கடந்த, 1ல், 52 அடி, 9ல், 56 அடியாக உயர்ந்தது. நேற்று, அணை நீர்மட்டம், 60 அடியாக உயர்ந்து, 195 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. வினாடிக்கு, 40 கன அடி நீர் வருகிறது. 2016க்கு பின், தற்போது அணை நீர்மட்டம், 60 அடியாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், வாழப்பாடி ஒன்றிய அலுவலகத்தில், விவசாயிகள், வருவாய், பொதுப்பணித்துறையினர் முத்தரப்பு கலந்தாய்வு கூட்டம், தாசில்தார் ஜானகி தலைமையில், நேற்று நடந்தது. அதில், அணை பாசன வாய்க்கால் சீரமைப்புக்கு பின், வரும் ஜனவரியில், ஆணைமடுவு அணையில் இருந்து, வசிஷ்ட நதியில் உடனே தண்ணீர் திறக்க, நேரடி ஆற்று பாசனம், ஏரிப்பாசன விவசாயிகள் வலியுறுத்தினர். பொதுப்பணித்துறை அலுவலர்கள், 'கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து, அரசு உத்தரவுக்கு பின், அணை பாசனம், நேரடி ஆறு, ஏரி பாசனத்துக்கு, வசிஷ்ட நதியில் தண்ணீர் திறக்கப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE