ஓசூர்: ஜவளகிரி வனச்சரகத்தில், பாறையில் இருந்து தவறி விழுந்த பெண் யானை உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி வனச்சரகம், உளிபண்டா காப்புக்காட்டிலுள்ள இச்சிகுட்டை வனப்பகுதியில், 25 முதல், 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை, அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளது. இதை, ரோந்து சென்ற வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை பார்த்தனர். பின்னர், யானை இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அருகிலுள்ள பாறையிலிருந்து தவறி விழுந்து, யானை உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று காலை கால்நடை மருத்துவர் மாதேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், யானைக்கு பிரேத பரிசோதனை நடத்தினர். யானை இறந்து கிடந்த இடம், அடர் வனம் என்பதால், மற்ற வனவிலங்குகளுக்கு உணவாக, யானையின் சடலம் அடக்கம் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE