ஓசூர்: வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் குறித்து, விவசாயிகளிடம் விளக்கும் வகையில், தேன்கனிக்கோட்டை உட்பட ஒன்பது இடங்களில், பா.ஜ., சார்பில் கூட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டம் குறித்து, பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. இதனால், விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். இதை தீர்க்க, விவசாயிகளை நேரடியாக சந்தித்து, வேளாண் சட்டங்களின் உண்மை நிலை மற்றும் நன்மைகள் குறித்து விளக்கமாக தெரிவிக்க, பா.ஜ., கட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், அந்தேவனப்பள்ளி, அக்கொண்டப்பள்ளி, மாதவ அக்ரஹாரம், குந்துமாரனப்பள்ளி, அஞ்செட்டி, ஜீமங்கலம், சுண்டட்டி ஆகிய ஒன்பது இடங்களில், வேளாண் சட்டங்களில் உள்ள, நன்மைகள் குறித்து விளக்கும் கூட்டம், நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். பா.ஜ., இளைஞரணி அகில இந்திய துணைத்தலைவர் முருகானந்தம், வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் குறித்தும், எதிர்க்கட்சிகள் மற்றும் இடைத்தரகர்கள் செய்யும் பொய் பிரசாரங்கள் பற்றியும், விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார். தேன்கனிக்கோட்டை நகர தலைவர் பார்த்திபன், மாவட்ட விவசாய அணித்தலைவர் ஜெய்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE