கரூர்: நெல் அறுவடை இயந்திர வாடகை உயர்ந்துள்ள நிலையில், தொடர் மழை காரணமாக மகசூல் குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கரூர், தான்தோன்றி மலை, க.பரமத்தி, குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட வட்டாரங்களில், 25 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. தற்போது, நெல் பயிர் முற்றிய நிலையில், விவசாயிகள் அறுவடை பணியை துவக்கியுள்ளனர். ஏற்கனவே, விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், அறுவடைக்காக, இயந்திரங்களை விவசாயி கள் நம்பியுள்ளனர். கரூர் மாவட்டத்தில், நெல் அறுவடை இயந்திரம் போதிய அளவில் இல்லாததால், ஈரோடு, சேலம், திண்டுக்கல், நாமக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து, நெல் அறுவடை இயந்திரம் கொண்டு வரப்படுகிறது. ஆனால், கடந்தாண்டை விட, நடப்பாண்டு நெல் அறுவடை இயந்திரத்துக்காக வாடகை உயர்ந்துள்ளது. மேலும், மகசூல் குறைந்துள்ளதால், நெல் பயிரிட்டுள்ள, விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: 'ஐஆர்-20' 'ஐஆர்- 36' மற்றும் பொன்னி ரக நெல் பயிரிட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து, வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், மகசூல் குறைந்துள்ளது. வழக்கமாக, ஒரு ஏக்கருக்கு, 30 முதல், 35 மூட்டைகள் மகசூல் கிடைக்கும். ஆனால், 20 முதல், 25 மூட்டைகள் வரை மட்டும் கிடைக்கிறது. மேலும், கடந்தாண்டு நெல் இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு, 1,500 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்பட்டது. தற்போது, 1,700 முதல், 1,800 ரூபாய் வாடகை தரப்படுகிறது. நெல் பயிரிட ஏக்கருக்கு முட்டு வழி செலவு, 22 ஆயிரம் முதல், 24 ஆயிரம் வரை ஆகியுள்ளது. ஆனால், மகசூல் குறைந்துள்ள நிலையில், நெல் இயந்திர வாடகை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, எதிர்பார்த்த அளவில் விவசாயிகளால் லாபம் ஈட்டுவது கடினமாக உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE