காத்மண்டு: நேபாள பார்லிமென்டை கலைக்கும்படி, அந்நாட்டு பிரதமர் கேபி ஷர்மா ஒலி பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்று பார்லிமென்ட்டை கலைத்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், அடுத்த ஆண்டு ஏப்., 30 - மே 10 இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடக்கும் என அறிவித்துள்ளார். பார்லிமென்ட் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, அமைச்சரவையில் இருந்து 7 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய சர்மா ஒலி, இன்று காலை அமைச்சரவையின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில், பார்லிமென்ட்டை கலைப்பது என முடிவு செய்யப்பட்டு, அதற்கன பரிந்துரையை ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரிக்கு அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத அமைச்சர் கூறுகையில், கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னையை தொடர்ந்து, இன்று(டிச.,20) நடந்த நேபாள அமைச்சரவையின் அவசர கூட்டத்தில், பார்லிமென்ட்டை கலைப்பது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
எரிசக்தி துறை அமைச்சர் பர்ஷமன் புன் கூறுகையில், அமைச்சரவை கூட்டத்தில், பார்லிமென்ட்டை கலைக்க முடிவு செய்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்தில் அரசியல்சாசன கவுன்சில் சட்டம் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை சர்மா ஒலி கொண்டு வந்தார். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். ஆனால், இந்த விவகாரத்தில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், கட்சியிலும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமால் தஹால் மற்றும் மாதவ் நேபாள் தலைமையில், நெருக்கடி கொடுத்துவந்தனர். பார்லிமென்ட் கலைப்பு தொடர்பாக தகவல் அறிந்த, கட்சியின் மூத்த தலைவர் பிரசண்டா, சர்மா ஒலியை நேரில் சந்தித்து பேசினார். ஆனால், இது குறித்து அவரிடம் எதுவும் தெரிவிக்காத சர்மா ஒலி, இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக கூறினார். தொடர்ந்து காலை 9.45 மணிக்கு அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே நடந்த இந்த கூட்டத்தில், பார்லிமென்ட்டை கலைப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆளுங்கட்சியில் ஏற்பட்ட கடும் மோதல் மற்றும் அந்நாட்டு வரலாற்றில், பார்லிமென்ட் நீண்ட நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பின்னணியில், சர்மா இந்த முடிவை எடுத்துள்ளார். அமைச்சரவை எடுத்த முடிவு ஜனாதிபதியிடம், பிரதமர் நேரில் வழங்கினார். இதனை ஏற்று கொண்ட ஜனாதிபதி, பார்லிமென்ட்டை கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏப்.,30- மே 10 இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடக்கும் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, சர்மா ஒலி, தேர்தல் கமிஷனர் மற்றும் அதிகாரிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், பாதுகாப்பு படை தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, பார்லிமென்ட் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, கேபி சர்மா ஒலி அமைச்சரவையில் இருந்து 7 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE