அரசின் இலவச முககவசம் 5 கோடிக்கு மேல் தேக்கம்: பணம் கிடைக்காததால் உற்பத்தியாளர்கள் விரக்தி| Dinamalar

தமிழ்நாடு

அரசின் இலவச முககவசம் 5 கோடிக்கு மேல் தேக்கம்: பணம் கிடைக்காததால் உற்பத்தியாளர்கள் விரக்தி

Added : டிச 20, 2020
Share
ஈரோடு: ரேஷன் மூலம் அரசு வழங்குவதற்காக உற்பத்தி செய்த, 5 கோடி மாஸ்க்குகளுக்கும் மேல், அரசு வாங்காததுடன், ஏற்கனவே உற்பத்தியாளர்களிடம் பெறப்பட்ட மாஸ்க்களுக்கு உரிய தொகை வழங்காததால், உற்பத்தியாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.கொரோனா பரவல் நிலையில், தமிழகத்தில் உள்ள, 1.98 கோடி ரேஷன் கார்டு உறுப்பினர்கள், 6.74 கோடி பேருக்கு தலா, இரண்டு துணி முககவசம் வழங்குவதாக, கூட்டுறவு துறை

ஈரோடு: ரேஷன் மூலம் அரசு வழங்குவதற்காக உற்பத்தி செய்த, 5 கோடி மாஸ்க்குகளுக்கும் மேல், அரசு வாங்காததுடன், ஏற்கனவே உற்பத்தியாளர்களிடம் பெறப்பட்ட மாஸ்க்களுக்கு உரிய தொகை வழங்காததால், உற்பத்தியாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
கொரோனா பரவல் நிலையில், தமிழகத்தில் உள்ள, 1.98 கோடி ரேஷன் கார்டு உறுப்பினர்கள், 6.74 கோடி பேருக்கு தலா, இரண்டு துணி முககவசம் வழங்குவதாக, கூட்டுறவு துறை மற்றும் உணவு வழங்கல் துறை அறிவித்தது. இதற்காக உற்பத்தி செய்யப்பட்ட முககவசங்களை அரசு முழுமையாக வாங்காமலும், ஏற்கனவே வாங்கி முககவசத்துக்கு முழு தொகையை விடுவிக்காமலும் உள்ளதால், உற்பத்தியாளர்கள் விரதி அடைந்துள்ளனர்.

இதுபற்றி, ஈரோட்டில், முககவசம் உற்பத்தி செய்து, தேக்கத்தால் பாதித்தவர்கள் கூறியதாவது: ரேஷன்கார்டு உறுப்பினர்கள், 6.74 கோடிப்பேருக்கு, 13.48 கோடி முககவசமும், இதர பயன்பாடு, புதிய நபர்களுக்கு வழங்குதல், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பகுதிக்கு வழங்குதல் போன்ற காரணத்துக்காக ஒரு கோடி முககவசம் என, 14.48 கோடி முககவசத்துக்கான, ஆர்டர் உற்பத்தியாளர்களுக்கு வழங்கினர். இதில், 24 நிறுவனங்கள் டெண்டர் போட்டு, 13 நிறுவனங்களை அரசு ஒதுக்கியது. 11 நிறுவனங்கள் டெண்டர் எடுத்து, ஈரோடு, தாராபுரம், தர்மபுரி, சேலம் என, பல்வேறு பகுதியில், ஆயத்த ஆடை தயாரிப்போர், மகளிர் தையல் குழுவினர், அரசு சார்பில் மாணவ, மாணவியருக்கு இலவச ஆடை தைத்து கொடுப்போரிடம், இப்பணி பிரித்து வழங்கினர். கடந்த ஜூலையில் ஒரு முககவசம், 14 ரூபாய்க்கு பேசி, பலரும் டெண்டர் போட்டதால், 6.45 ரூபாய்க்கு இறுதியானது. டெண்டர் எடுத்தவர்களிடம் இருந்து பல கை மாறி, தைத்து கொடுக்கும் நபர்களுக்கு துணி, நூல், குறைந்த பட்ச தொகை கொடுக்கப்பட்டது. இளம்பச்சை, அடர் பச்சை, நீல நிற துணியை வெட்டி, தைத்து, தலா, 50 மாஸ்க் வீதம் கட்டி கொடுக்க, ஒரு முககவசத்துக்கு, இரண்டு ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் உற்பத்தியாளர்கள் இவற்றை தைத்தவற்றை அவ்வப்போது வாங்கி, கடந்த அக்டோபரில் அரசு கைகாட்டும் மாவட்டத்துக்கு அனுப்பி, ரேஷன் கடை மூலம் நவ., முதல் வினியோகித்தனர்.

இதற்கிடையில், தி.மு.க., உட்பட பல்வேறு தரப்பில், இப்பணியில் முறைகேடு நடந்ததாகவும், விசாரிக்க வேண்டும் என பல்வேறு சர்ச்சை எழுந்ததால், டெண்டர் பெற்றவர்களுக்கு முதற்கட்டமாக, ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு வழங்கிய பின், அடுத்தடுத்த ஆர்டர்களுக்கு தொகை வழங்கவில்லை. ரேஷன் கடைகளிலும், 40 முதல், 60 சதவீதம் பேருக்கு மட்டுமே முககவசம் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வழங்குவதற்கான முககவசத்தை உற்பத்தி செய்து, தலா, 50 வீதம் கட்டி, 5,000 எண்ணிக்கை கொண்ட பண்டலாக சாக்கில் கட்டி, 5 கோடி முககவசம் வரை தயாராக வைத்துள்ளோம். டெண்டர்கள் எடுத்தவர்கள், எங்களிடம், 'நாங்கள் கேட்கும்போது முககவசத்தை கொடுத்தால் போதும். அதுவரை வைத்திருங்கள். முதற்கட்டமாக பெற்ற முககவசத்துக்கும் அரசு ஒரு தொகை மட்டுமே தந்துள்ளது. அரசு பணம் தந்ததும், உங்களுக்கு வழங்குகிறோம்' என கூறிவிட்டனர். தைத்து கொடுத்தவர்களில், 80 சதவீதம் பேர் பெண்கள். அவர்களுக்கு கூலியாக கூட, பணம் கொடுக்க முடியாமல் பல உற்பத்தியாளர்கள் பரிதவிக்கின்றனர். தவிர, தைத்து வைத்த, 5 கோடிக்கும் மேற்பட்ட முககவசத்தை அரசு வாங்காமல் போனால், தைத்து கொடுத்தவர்களுக்கு பல கோடி ரூபாயை எவ்வாறு வழங்குவது என தெரியாமல், தற்கொலை செய்யும் நிலையில் உள்ளோம். இவ்வாறு உற்பத்தியாளர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X