புதுடில்லி : பா.ஜ., அரசால் அவர்கள் ஆளும் மாநிலங்களிலும், ஒட்டுமொத்த தேசத்திலும் வன்முறை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகலும், பா.ஜ.,வால் இந்த நாடு பாதுகாப்பு அற்றதாக உள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருவதால் இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
மத்தியில் பா.ஜ., அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. குஜராத், கோவா, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஆட்சி செய்து வருகிறது. கொரோனா பிரச்னையால் நாட்டின் பொருளாதாரம் மந்தமாகி இருப்பது உண்மை தான். இது நமக்கு மட்டுமல்ல உலகளாவிய தாக்கமும் கூட.
இந்நிலையில் பா.ஜ., அரசால் நாட்டில் சட்டம், அமைதி சீர்குலைந்து இருப்பதாகவும், வன்முறை, குற்றச்சம்பவங்கள், வேலைவாய்ப்பின்மை, அதிகரித்து இருப்பதாகவும், நாட்டின் வளர்ச்சி மந்த நிலையை நோக்கி பயணப்பதாகவும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்ச்சி எப்படி உள்ளது, பாலியல், வன்முறை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை ஒரு புள்ளி விவர அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இந்த சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகவும், ஒட்டு மொத்த நாட்டிலுமே குற்ற சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகவும் கூறி சில புள்ளி விவரங்களை பட்டியலிட்டுள்ளது. அப்படி காங்கிரஸ் வெளியிட்ட ஒவ்வொரு புள்ளிவிவர பட்டியல் உடன் #IndiaUnsafeUnderBJP என்ற ஹேஷ்டாக்கையும் பதிவிட்டு வருகிறது.
பா.ஜ., அரசால் எப்படியெல்லாம் பாதிப்பு ஏற்பட்டது என பலரும் தங்களது கருத்துக்களாக இந்த ஹேஷ்டாக் உதவியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவர் பா.ஜ., ஆட்சியில், ''அதிக வேலையின்மை, பொருளாதாரம் பாதிப்பு, அதிக பாலியல் பலாத்காரம் சம்பவங்கள், தனியார்மயம், கொரோனா அதிக பாதிப்பு'' போன்றவை ஏற்பட்டதாக கருத்து பதிவிட்டுள்ளார். இது போன்று பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருவதன் காரணமாக டுவிட்டரில் #IndiaUnsafeUnderBJP என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE