வாழ்வில் ஆயிரம் தடைகள் இருந்தாலும் தடகள வீராங்கனை போல் தடை தாண்டி ஓடும் பெண்கள் பலர் இருக்க தான் செய்கிறார்கள். பெண்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை என்ற அளவிற்கு பெண்கள் நிரம்பிய தனியொரு உலகம் சுற்றி கொண்டிருக்கிறது. இந்த தனி உலகில் எழுத்தாளராக பயணத்தை துவங்கி மாடல், நடிகையாக நுழைந்து வலம் வருகிறார் சென்னை ஆனந்தி.
ஆனந்தி பேசுகிறார்... ''நடுத்தர குடும்பத்தில் பிறந்த நான் பள்ளி, கல்லுாரி படிக்க சமூக ஆர்வலர்கள் ஐஷா ராவ், உதயா மகாதேவன் உதவினர். விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் சில ஸ்பான்சர்கள் உதவியில் போட்டிகளில் பங்கேற்றனர்.பள்ளிக்கு பின் எம்.எஸ்.டபிள்யூ படித்து முடித்து சினிமாவுக்குள் நுழைந்தேன். அதற்கு பின் எழுத்து துறைக்கு வந்து குழந்தைகளுக்கான கதைகள் எழுத துவங்கினேன். 'மெட்ராஸ்' படத்தில் கார்த்திக்கு தந்தையாக நடித்த ஜெயராவின் நடிப்பு பயிற்சி பள்ளியில் 8வது படிக்கும் போதே பயிற்சி பெற்றேன். பயிற்சி முடித்த பின் நானே பயிற்சி கொடுக்கும் அளவு வளர்ந்தேன்.
பாலிவுட் இயக்குனர் சுதிர் மிஸ்ராவின் 'சீரியஸ் மென்' ஆங்கில வெப் சீரியஸில் குழந்தையுடன் இருக்கும் பிரிட்டிஷ் பெண் வேடத்தில் என் போட்டோ மட்டும் வந்தது. ஆனால், அது எனக்கு பெரிய பெயர் வாங்கி கொடுத்தது. புதுமுக இயக்குனர் தினேஷ் குறும்படத்தில் போராளி மனைவி மற்றும் எர்த்லிங் என்ற பெண் இயக்குனரின் 'உடம்பு' குறும்படத்தில் நடித்துள்ளேன்.இப்போது கருப்பு நிற மாடலிங் மங்கைகளுக்கு வரவேற்பு இருப்பதால் மாடலிங் துறையிலும் களமிறங்கி உள்ளேன். கம்பெனி புரமோஷன்களுக்கு மாடலிங் செய்கிறேன். போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறேன். இதோடு எழுதுவதை நான் நிறுத்தவில்லை. பள்ளி மாணவர்களுக்காக சிறு கல்வி சேவையும் செய்து வருகிறேன்'' என்றார்.
-ஸ்ரீனி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE