'வெற்றி எனும் வேட்கை உன்னுள் இருக்கும் வரை தோல்விகள் கண்களில் தெரியாது' என்பதற்கேற்ப, தனது திறமையை வெளியில் கொணர தனி ஆளாய் போராடி வென்றிருக்கிறார் ஆடை வடிவமைப்பாளர் அபர்ணா.
தஞ்சாவூரில் பிறந்த அபர்ணாவுக்கும் இதில் ஆசை தோன்றினாலும், பெற்றோருக்காக இளங்கலை கணிப்பொறியியல் படித்தார். அப்போதிருந்தே 'டெய்லரிங்' கற்று ஆடை வடிவமைப்பதிலும், அலங்கரிப்பதிலும் திறமையை வளர்த்துக் கொண்டார்.
எல்லோரைப்போல நாமும் இருந்துவிடக் கூடாது என்ற எண்ணமும், தன் திறமை மீதான நம்பிக்கையும் அவரை அடுத்தகட்ட நகர்வுக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றது. அங்கு பேஷன் டிசைனிங் படித்தாலும், பல்வேறு சூழலால் அதனை தொடர முடியவில்லை. சொந்த முயற்சியில் 'பொட்டிக்' தொடங்க வேண்டும் என்பதே பெருங்கனவாக இருந்தது.
அதற்கு பெரிதும் உதவியது அவருடைய 'டிக்-டாக்' வீடியோக்கள் தான். 'டப்ஸ்மாஷ்' செயலியில் அறிமுகம் ஆனது முதல் 'டிக்-டாக்' வரை முகநுாலில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இவரை பின் தொடர்கின்றனர். இவரின் வீடியோக்கள் சினிமா பிரபலங்களையும் கவர்ந்தது. குறிப்பாக நடிகை குஷ்பு சினிமா வாய்ப்புகள் வழங்கியும், குடும்ப சூழலால் அது கை நழுவிப்போனது. தனது குறிக்கோளில் பின்வாங்காத அபர்ணா, அடுத்தகட்ட நகர்வுக்காக, சென்னை, தஞ்சாவூர் என அலைந்தார். இவரது வடிவமைப்புகளை சமூக வலைதளங்களில் பார்த்த குஷ்பு மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். நண்பர்களின் கடைகளில் மெஷின்களை பெற்று, ஆர்டர்களுக்கு ஆடை வடிவமைத்து வருமானம் ஈட்டினார். உழைப்பால் கிடைத்த பணத்தில் 'பொட்டிக்' துவக்கி சினிமா பிரபலங்களுக்கு வடிவமைப்பாளராக இருக்கிறார்.

தற்போது நடிகை குஷ்புவின் ஆடை வடிமைப்பாளர். சுஹாஷினி, அதுல்யா ரவி, யாஷிகா ஆனந்த், நந்திதா, நீலிமா. ரட்ஷிதா, பார்வதி நாயர் போன்ற நடிகைகளுக்கு, யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களுக்கு ஆடைகளை வடிவமைக்கிறார். அத்துடன் ப்ரைடல் கவுன், க்ரூம் சூட், பிறந்த குழந்தை ஆடைகள், குழுந்தைகளுக்கான பால் கவுன், ப்ரைடல் ப்ளவுஸ் ஆகியவற்றிலும், விளம்பர படங்களுக்கு ஆடை வடிவமைப்பதிலும் கைதேர்ந்துவிட்டார்.
சம்யு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE