உன் கருங்கூந்தலில் சேர கார்மேகமும் காதல் கொள்ளும், மின்னல்கள் மிரளும் உன் காந்த கண் அசைவில், ரோஜா இதழ்களால் உருவாக்கப்பட்டதோ உன் செவ்விதழ்கள் என இளசுகளின் இதயதுடிப்பை திணறடிக்க புதிய புயலாய் சினித்துறையில் நுழைந்துள்ள நடிகை திவ்யா சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக மனம் திறந்த நிமிடங்கள் ...
உங்களை பற்றி...
சொந்த ஊர் கோயம்புத்துார். பேஷன் டிசைனிங் முடித்துள்ளேன், அப்பா, அம்மா, அண்ணன் என மூவரும் என் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள்.
பெற்றோர்கள் ஒத்துழைப்பு...
சினிமா என்றாலே எல்லாருக்கும் பயம் இருக்கும். இத்துறை வேண்டாம் என்று கூறியவர்கள், எனது நடிப்பை பார்த்துவிட்டு சம்மதம் தெரிவித்தனர்.
இதுவரை நடித்தது...
முதலில் வெளியான படம் 'இட்லி'. அதில் சிறு கேரக்டரில் நடித்தேன். தற்போது பெயரிடப்படாத இரு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறேன். இதுதவிர குறும்படங்கள், ஆல்பம் என நிறைய நடித்துள்ளேன்.
நடிப்பு தவிர...
எனக்கு எல்லாதுறையிலும் கால் பதிக்க ஆசை. புதுமுக ஹீரோயின்களுக்கு 'டப்பிங்' பேசுகிறேன். ஒரு படத்தில் இரு பாடல்கள் எழுதியுள்ளேன். ஒரு படத்திற்கு உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறேன். தற்போது இசைக்கான பயிற்சியும் எடுத்து வருகிறேன்.
குண்டான தேகம்...
அதுக்கு கொரோனா காரணம். வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டாம் என்ற உத்தரவால், வீட்டுக்குள்ளேயே சாப்பிட, துாங்க என முடங்கி கிடந்ததால், ரொம்ப குண்டாக மாறிவிட்டேன். தற்போது உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்துவருகிறேன்.
பெண்கள் இயக்குனராவது குறித்து...
ஆண்களுக்கு நிகராக பெண்களும் இத்துறையில் சாதித்து வருகின்றனர். சரியான வாய்ப்புகள் கிடைத்தால் என்னுடைய திறமையும் ஒரு நாள் வெளியில் வரும். நான் ஏற்கனவே குறும்படமும், ஆல்பமும் இயக்கிய அனுபவம் உள்ளது.
புதுமுகங்களுக்கான் டிப்ஸ்...
கடின உழைப்பு ரொம்ப முக்கியம். திறமை இருந்தால் மட்டுமே இங்கு ஜொலிக்க முடியும். வாய்ப்புகள் நம் வீட்டு கதவை தட்டும் காலம் வரும்வரை, அதை உருவாக்க நாம் போராடவேண்டும்.
லட்சியம்
திரைக்கு உள்ளே நடித்தாலும், திரைக்கு வெளியே இயக்கினாலும், மக்கள் மனதில் தனி முத்திரை பதிக்க வேண்டும்.
தீப்சி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE