பொன்னேரி : பொன்னேரி அருகே, மூதாட்டி சடலம், 12 மணி நேரம் அலைக் கழிப்பிற்கு பின், எரிக்கப்பட்டது.
பொன்னேரி அடுத்த, ஆமூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதவன் நகரைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு, 38. இவரது மனைவி விஜயலட்சுமி. விஜயலட்சுமியின் தாயார் ராஜேஸ்வரி, 78. மதுரையைச் சேர்ந்த இவர், மூன்று மாதங்களாக கணேஷ்பாபு, விஜயலட்சுமியுடன் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜேஸ்வரி, உடல்நலம் பாதித்து இறந்தார். கணேஷ்பாபு வசிக்கும் வீட்டில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ள ஆமூர் ஏரிக்கரை அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் இறுதி சடங்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
தகவல் அறிந்த, ஆமூர் கிராமத்தினை சேர்ந்த ஒரு பிரிவினர், மேற்கண்ட சுடுகாட்டில் ராஜேஸ்வரிக்கு இறுதிச் சடங்கு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானது எனவும் தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம், கணேஷ்பாபு மற்றும் அவரது உறவினர்கள் கெஞ்சியும் பயனில்லை.பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன், தகவல் அறிந்து அங்கு வந்தார். ஆமூர் கிராமத்தினரிடம் பேச்சு நடத்தியபோது, வேறு ஊரைச் சேர்ந்தவர்களுக்கு, எங்கள் ஊர் சுடுகாட்டினை பயன்படுத்தக்கூடாது என, தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, விஜயலட்சுமியின் வீட்டிற்கு அருகில், மாதவரம் ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு இருப்பதை அறிந்து, அங்குள்ளவர்களிடம் பேச்சு நடத்தினர்.
ராஜேஸ்வரியின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய மாதவரம் கிராமத்தினர் ஒத்துழைத்தனர். இரவு, 10:00 மணிக்கு, பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் முன்னிலையில், ராஜேஸ்வரி யின் உடல் எரிக்கப்பட்டது.இது குறித்து, வட்டாட்சியர் மணிகண்டன் தெரிவித்தாவது:இரு கிராமத்தினருடனும் பேச்சு நடத்திய பின், மாதவரம் சுடுகாட்டில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. மேற்கண்ட பகுதிக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE