காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தில், மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால், பார்லி.,யைக் கலைக்க, பிரதமர், கே.பி.சர்மா ஒலி பரிந்துரைத்தார்.
சில மணி நேரங்களிலேயே, அதற்கு, அதிபர் பித்யா தேவி பண்டாரி ஒப்புதல் அளித்துள்ளார். இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்மானம்நேபாளத்தில், பிரதமர், கே.பி. சர்மா ஒலி தலைமையிலான, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது. கடந்த, 2018ல், ஒலி தலைமையிலான, சி.பி.என்.யு.எம்.எல்., மற்றும் முன்னாள் பிரதமரான புஷ்ப கமல் தாஹரல் பிரசந்தா தலைமையிலான, சி.பி.என்., மாவோயிஸ்ட் மையம் இணைந்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது.
இருப்பினும், இரு அணிகளாகவே, இவர்கள் செயல்பட்டு வந்தனர். கட்சியில், பிரசந்தா கோஷ்டிக்கு பெரும்பான்மை அதிகாரம் உள்ளது.கடந்த சில மாதங்களாகவே, இரு தரப்பும் இடையே மோதல் இருந்து வருகிறது. 'பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்' என, ஒலிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.'அரசு மற்றும் கட்சிப் பணிகளை இணைத்து பார்ப்பதால், அவரால் சரியாக செயல்பட முடியவில்லை' என, பிரசந்தா தரப்பில் கூறப்பட்டது.பிரச்னைக்கு தீர்வு காண, பல சுற்று பேச்சுகள் நடந்தன. ஆனாலும், இழுபறி நீடித்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவின் சில பகுதிகளை இணைத்து, புதிய தேசிய வரைபடத்தை, ஒலி வெளியிட்டார். சீன ஆதரவாளராகக் கருதப்படும் அவருடைய இந்த நடவடிக்கைக்கு, கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. அப்போது முதல், பதவியில் இருந்து விலக, ஒலிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஒலி தலைமையில், அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதில், பார்லிமென்டை கலைக்க, அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை செய்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுஉள்ளது.
அதிபரை நேரில் சந்தித்து, தீர்மான நகலை, ஒலி அளித்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே, பார்லி.,யைக் கலைப்பதாக, அதிபர் பண்டாரி அறிவித்தார். மேலும், ஏப்., 30 மற்றும் மே, 10ல் இரண்டு கட்டங்களாக, பார்லி.,க்கு முன்னதாகவே தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
எதிர்பார்ப்பு
நேபாள பார்லி.,யின் கீழ் சபையான, பிரதிநிதிகள் சபையின், 275 உறுப்பினர் களை தேர்வு செய்யும் தேர்தல், 2017ல் தான் நடந்தது. தற்போது பார்லி., கலைக்கப்படுவதால், முன்னதாகவே தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றாக இணைந்து போட்டியிடுமா அல்லது கட்சி உடையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE