கடலுார் : கடலுார் நகரத்தில் கன மழையினால் சேதமடைந்த சாலைகளில் பேட்ஜ் ஒர்க் தீவிரமாக நடந்து வருகிறது.கடலுார் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல் காரணமாக சூறை காற்றுடன் கனமழை கொட்டியது.
சிதம்பரத்தில் ஒரே நாளில் 34 செ.மீ., மழை பெய்தது. மாவட்டத்தின் கடலோரப் பகுதிகள் வெள்ளக் காடானது. ஏற்கனவே கடலுார் நகரப் பகுதிகளில் குடிநீர் பைப், பாதாள சாக்கடைத் திட்டம், புதைவட கேபிள் ஆகியவற்றிற்காக சாலைகளில் பள்ளம் தோண்டப் பட்டுள்ளன. தண்ணீர் தேங்கியதில் அரைகுறையாக இருந்த சாலைகளிலும் ஜல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே சிதறி கிடந்தன.இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டனர்.
குறிப்பாக எஸ்.பி., அலுவலகம், ஜட்ஜ் பங்களா மற்றும் சப் ஜெயில் ரோடு, முதுநகர், ஜவான்ஸ் பவன், திருவந்திபுரம் சாலைகள் உட்பட கடலுார் நகராட்சி பகுதியில் மட்டும் 17 கி.மீ., மாநில நெடுஞ்சாலை, 11.5 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை, 78 கி.மீ., பிடி சாலைகள், 223.153 கி.மீ., யு.எல்.பி., சாலை, 71 கி.மீ., சி.சி., சாலைகள் கந்தலாகின.இந்த சாலைகளில் கார், கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருந்தன. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து எழுந்துதான் செல்ல வேண்டும்.மீண்டும் மழை பெய்யும் எனகூறப்பட்டதால், மக்கள் செம்மண்ணை கொட்டிக் கூட பள்ளத்தில் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் தினசரி கடும் அவதிப்பட்டனர்.இதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில், விரிவான செய்தி வெளியிட்டது. அதைத்தொடர்ந்து கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, அதிகாரிகளிடம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், சேதமடைந்த சாலைகளை உடனடியாகசீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதையடுத்து, கடலுார் நகரப் பகுதியில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் நகராட்சி சார்பில், கணக்கெடுக்கப்பட்டன.கடலுார் நகரில் 30 சாலைகள் அதிக சேதமடைந்ததாக தேர்வு செய்யப்பட்டு, போர்க்கால அடிப்படையில் பேட்ஜ் ஒர்க் துவங்கி நடந்து வருகிறது.பாஷியம் ரெட்டி தெரு, சப் ஜெயில் ரோடு, பழைய கலெக்டர் அலுவலக சாலை, சண்முகம்தெரு, அங்காளம்மன் கோவில் தெரு ஆகிய சாலைகளில் அதிகளவு சேதமடைந்த பகுதிகளில் ஜல்லி நிரப்பி பேட்ஜ் ஒர்க் தீவிரமாக நடக்கிறது.இது குறித்து கமிஷனர் ராமமூர்த்தி கூறுகையில், 'கடலுார் நகரில் முதற்கட்டமாக அதிகளவு சேதமடைந்த 30 சாலைகள் பேட்ஜ் ஒர்க் செய்யப்படுகின்றன. மின்சார கேபிள் பணி முடிவடைந்த பகுதிகளில் முழுவதுமாக சாலை போடும் பணி படிப்படியாக நடைபெறும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE