சென்னை: ''தி.மு.க.,விற்கு சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள் என்ற வித்தியாசம் கிடையாது; நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வு தான் உள்ளது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில், அனைத்து மத தலைவர்கள் பங்கேற்ற, ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் விழா, சென்னை சாந்தோமில், நடந்தது.
ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஸ்டாலின் பேசியதாவது: கொரோனா காலத்தில், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு, தி.மு.க., சார்பில், 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தை அறிவித்து, நிவாரண உதவிகளை வழங்கினோம். நாட்டிற்கு முதலில் தேவை ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம். தி.மு.க.,விற்கு சிறுபான்மை மக்கள், பெரும்பான்மை மக்கள் என்ற வித்தியாசம் கிடையாது. நாம்அனைவருக்கும், தமிழர்கள் என்ற உணர்வு தான் உள்ளது.சமூகத்தில் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்டுள்ள முயற்சியை முறியடிப்போம்; வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், சென்னை மயிலை மறை மாவட்ட கத்தோலிக்க பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி, தருமமிகு சற்குரு பாலயோகி சுவாமிகள் திருமடத்தைச் சேர்ந்த குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி, தமிழக காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். விழா ஏற்பாடுகளை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE