பொது செய்தி

தமிழ்நாடு

முழு உயிர்ப்புடன் பாடிய விஷ்ணுதேவ்!

Added : டிச 20, 2020
Share
Advertisement
கலைஞர்கள், கலையார்வலர்களை இணைக்கும் பாலமாக, 'முத்ரா' இருக்கிறது. இந்தாண்டு, தன், 26வது ஆண்டை கொண்டாடுகிறது. 'ஆன்லைன்' மூலமாக, ஆண்டு முழுதிலும், இலவசமாக ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது முத்ரா.இந்த அமைப்பை நடத்தி வருவோர், பாஸ்கரும், ராதா பாஸ்கரும். இவர்களில், முன்னவர் மிருதங்க வித்வான், பின்னவர் இசையை முறையாகக் கற்ற ஒரு பாடகி.இந்த அமைப்பின் வாயிலாக, கே.எஸ்.விஷ்ணுதேவ்

கலைஞர்கள், கலையார்வலர்களை இணைக்கும் பாலமாக, 'முத்ரா' இருக்கிறது. இந்தாண்டு, தன், 26வது ஆண்டை கொண்டாடுகிறது. 'ஆன்லைன்' மூலமாக, ஆண்டு முழுதிலும், இலவசமாக ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது முத்ரா.இந்த அமைப்பை நடத்தி வருவோர், பாஸ்கரும், ராதா பாஸ்கரும்.

இவர்களில், முன்னவர் மிருதங்க வித்வான், பின்னவர் இசையை முறையாகக் கற்ற ஒரு பாடகி.இந்த அமைப்பின் வாயிலாக, கே.எஸ்.விஷ்ணுதேவ் குழுவினரின் இசையை, கடந்த வியாழக்கிழமை அன்று, 'பாலம் டிவி' எனும் செயலி மூலம் கேட்கவும், பார்க்கவும் பெற்றோம்.'சுகுணமுலே செப்புகொண்டி...' என்ற தியாகராஜரின் சக்கரவாக ராகப் பாடலை, மிகவும் அனுபவித்துப் பாடினார் விஷ்ணுதேவ். ராமனைப் பார்த்து, அவனது நற்குணங்களை பாடியதற்கான அசல் காரணத்தைக் கூறி, ஒரு நிந்தாஸ்துதியாக இதை அமைத்திருப்பார் சத்குரு.மேலும், இந்த ராகத்தின் முழுபண்பிற்கான ஒரு எடுத்துக்காட்டாகவும், இது இருக்கும். விஷ்ணுதேவ் முழு உயிர்ப்புடன் இந்தப் பாடலை அளித்ததுடன் நில்லாமல், ஒரு கவனமீர்க்கும் நெரவலையும், கற்பனை ஸ்வரங்களையும், ஸ்நாநாதி சுகர்மம்புலு எனும் இடத்தில் வழங்கினார்.ரூபக தாளத்தில், ஒரு ஆவர்த்தன ஸ்வரங்களை முதலில் கொடுத்து, அடுத்தடுத்த சுற்றுகளில் நீண்ட கோர்வைகளாகவும் வழங்கியது பாடகருக்கு பெருமை சேர்த்தது.ராக ஆலாபனை வழங்காததை ஈடுசெய்தது! இவ்விடங்களில், வயலின் பக்கவாத்தியமான ராகவேந்திர ராவும் மிருதங்கத்தில் ஷேர்த்தலை அனந்தகிருஷ்ணனும் கட வாத்தியத்தில் என் ராஜாராமனும், அவர்களது சரிநிகர் வாசிப்பினால், இந்த இடத்திற்குரிய பெருமைக்குப் பங்களித்தனர். அடுத்து வந்தவை, இரண்டு ராகங்கள் யதுகுலகாம்போதியும் கல்யாணியும். இரண்டையுமே அவற்றிற்குரிய பரிமாணங்களுக்கு ஏற்றபடி விஸ்தரித்தார்.வழங்கிய பாடல்கள்: மாரிமுத்தாபிள்ளையின் காலைத்துாக்கி நின்றாடும்; தியாகராஜரின் நிதிசாலசுகமா. இரண்டாவதிற்கு, நிரவலும் ஸ்வரங்களும் கச்சிதமாக அளித்தார் விஷணு தேவ்.விஷ்ணுதேவ், 2012ல், 'ஜெயா டிவி' நடத்திய, 'கர்நாடிக் மியூசிக் ஐடல்' போட்டியில், முதல் பரிசை வென்றவர்என்பது, இங்கே குறிப்பிடத்தக்கது.இதில் பங்கு பெற்ற கலைஞர்கள் பதிவாகிய இடத்தைப் பற்றி சிலாகித்துப் பேசினர். ஒலிக்கான தொழில்நுட்பம் மிகவும் உயரிய நிலையில் உள்ளது என்றும், அவர்களுக்கு மேடை அனுபவத்தைப் போலவே, இந்தப் பதிவின் போதும் ஏற்பட்டது என்பதையும் கூறினர். இடையில் கைதட்டல்கள் எங்கிருந்து வந்தன எனும் கேள்வி நம் முன்னே!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X