சென்னை: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, வேதியியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு, வரும், 30ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கடந்த, 2018 - 19ம் கல்வியாண்டில், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, வேதியியல் முதுகலையாசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
அதில், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அவர்களுக்கு பணியிட ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு, 'எமிஸ்' இணையதளம் வழியே, வரும், 30ம் தேதி நடக்க உள்ளது.ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலில் உள்ள தேர்வாளர்கள், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களா என்பதை, முதலில் உறுதி செய்ய வேண்டும்.தங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு, முன்கூட்டியே தகவல் அனுப்ப வேண்டும்.
அவர்கள் நுழைவுச்சீட்டு, அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களுடன், கலந்தாய்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சான்றிதழ்களை சரி பார்த்து, அனைத்தும் சரியாக இருந்தால் மட்டும், கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE