சென்னை: சுற்றுச்சூழல் துறை அதிகாரி பாண்டியன், லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிடியில் சிக்கியுள்ள நிலையில், அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த வனத்துறை உயரதிகாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன. பதிவுத் துறை, போக்குவரத்து துறையை தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறையிலும் சோதனை தீவிரமாகி உள்ளது.இவ்வகையில், சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் நடந்த சோதனையில், சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் பாண்டியன் சிக்கினார்.அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து, கணக்கில் வராத, 1.88 கோடி ரூபாய் ரொக்கம்; 1.27 கோடி ரூபாய் தங்க, வைர நகைகள் உட்பட, 11 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கின.
இதையடுத்து, அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். சுற்றுச்சூழல் அனுமதி, கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை மண்டல சான்று பெறுவதற்கான கோப்புகளை பைசல் செய்ய, பாண்டியன் நடத்திய லஞ்ச வேட்டை குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.இது குறித்து, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கூறியதாவது:சுற்றுச்சூழல் துறைக்கு அயல்பணி அடிப்படையில், ஆணைய தலைவர், உறுப்பினர்களாக வனத்துறை உயர் அதிகாரிகள் வருகின்றனர். இதில், பல உயரதிகாரிகளுக்கு வசூல் ஏஜன்டாக, பாண்டியன் செயல்பட்டார். தற்போது, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை பாண்டியனை மட்டும், சுற்றி வருவதாக தெரிகிறது. இதற்கு அப்பால் உள்ள வனத்துறை உயரதிகாரிகள் தொடர்பு குறித்து விசாரித்தால், பல்வேறு உண்மைகள் அம்பலமாகும்.ஐந்து ஆண்டுகளில், ஏராளமான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை பெற்றுத் தருவதில், பாண்டியன் மற்றும் அவருக்கு துணையாக இருந்த வனத்துறை அதிகாரிகள் குறித்தும், விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பாண்டியனின் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விசாரணையால், வனத்துறை அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.பதிவுத் துறைக்கு போலீஸ் கடிதம்லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கி உள்ள, சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில், பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி குவித்து இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பாண்டியன் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள, சொத்து விபரங்கள் குறித்து தெரிவிக்குமாறு, பத்திரப்பதிவு துறைக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.அத்துடன், பாண்டியன் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கி லாக்கரில் உள்ள, நகைகளை பறிமுதல் செய்ய முடிவு செய்துள்ளனர். லஞ்ச முதலையாக செயல்பட்டு, பல கோடி ரூபாய்க்கு அதிபதியானது எப்படி என்பது குறித்து, பாண்டியனிடம் விசாரிக்க உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE