திண்டுக்கல்: ''கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், ஜன., முதல் போராட்டம் தொடரும்,'' என, கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் நிர்மலா கூறினார்.
திண்டுக்கல்லில், அரசு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, மாநில தலைவர் நிர்மலா கூறியதாவது:மினி கிளினிக் திட்டத்திற்காக, ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவ குழு, தாய் - சேய் நல சேவை, பள்ளி தடுப்பூசி திட்டத்தில் பணிபுரியும் செவிலியர்களை, பணியிட மாற்றம் செய்கின்றனர். அதற்கு பதில், தனியாக செவிலியர்களை நியமிக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சஞ்சீவினி திட்டத்தில் உள்ள நடைமுறை சிரமங்களை களைய வேண்டும். துணை சுகாதார நிலைய கட்டட பராமரிப்பு, வாடகை, மினி கிளினிக் ஏற்பாடுகளை, செவிலியர்களை சொந்த பணத்தை செலவு செய்ய சொல்வதை தவிர்க்க வேண்டும்.பெண் ஊழியர்கள் பணிபுரியும் இடங்களில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் குழு அமைக்க வேண்டும். சில இடங்களில் அவை சரியாக செயல்படவில்லை. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், ஜனவரி முதல் போராட்டம் தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE