வடவள்ளி:பொம்மணம்பாளையத்தில், 10 வயது சிறுவன் முகத்தில், மர்ம நபர் தீ வைத்ததாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.பொம்மணம்பாளையம், நேதாஜி வீதியை சேர்ந்த, 10 வயது சிறுவனும், அவனது நண்பனும், வீட்டிற்கு அருகே உள்ள மைதானத்திற்கு விளையாட சென்றுள்ளனர்.திடீரென, முகத்தில் தீ காயங்களுடன், கூச்சலிட்ட சிறுவன், 2 மர்ம நபர்கள் வந்து தனது முகத்தில் தீ வைத்ததாக கூறினான். சிறுவனின் பெற்றோர்கள், உடனடியாக கல்வீரம்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவிக்குப் பின், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அப்பகுதியில் இத்தகவல் வேகமாக பரவி, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து வந்த வடவள்ளி போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை செய்து, அதன்பின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனிடம் விசாரணை செய்தனர்.போலீசாரின் விசாரணையில், மர்ம நபர்கள் தீ வைத்ததாக சிறுவன் பொய் சொன்னது தெரிய வந்தது. இரண்டு சிறுவர்களும், வாயில் பெட்ரோலை ஊற்றி, அதனை துப்பி தீ பற்ற வைத்து விளையாடி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக, சிறுவனின் முகத்தில் தீ பற்றியது. உண்மையை கூறினால் பெற்றோர்கள் அடிப்பார்கள் என்ற பயத்தில், சிறுவர்கள் பொய் சொன்னது தெரியவந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE