விழுப்புரம்: விழுப்புரம் அருகே, எல்லீஸ்சத்திரம் தடுப்பணை தென்பெண்ணை ஆற்றில், ஐந்து ஆண்டுகளுக்கு பின் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்க்க, ஆயிரக்கணக்கான மக்கள், குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால், திருவிழா போல காணப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து, வறட்சி நிலவியது. மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான தென்பெண்ணை, பம்பை உள்ளிட்டவை வறண்டு காணப்பட்டன. இந்நிலையில், நவ., மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, 'நிவர்' மற்றும் 'புரெவி' புயலால் பெய்த கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வெகுவாக நிரம்பி வருகின்றன.
மாவட்டத்தில், 17ம் தேதி இரவு கொட்டித் தீர்த்த கனமழையால், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறி, தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் அடுத்த எல்லீஸ்சத்திரத்தில், தடுப்பணை அமைந்துள்ள தென்பெண்ணை ஆற்றில், ஐந்து ஆண்டுகளுக்கு பின், தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதைப் பார்க்க, சுற்றுப்பகுதி கிராம மக்கள், குடும்பம் குடும்பமாக படையெடுத்து வருகின்றனர். பலர், ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர்.மக்கள் அதிகளவில் குவிந்து வருவதால், எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணை ஆறு, திருவிழா போல காட்சி அளிக்கிறது. தடுப்பணை பகுதியில் தற்காலிக கடைகளும் முளைத்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE