திருப்பூர்:'ஆயத்த ஆடை உற்பத்தி துறையினர், சுய பரிசோதனை மூலம், குறைகளை கண்டறிந்து சரி செய்யவேண்டும்' என, ஏற்றுமதியாளர் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.திருப்பூர், ஏற்றுமதியாளர் சங்க, 30வது பொதுக்குழு கூட்டம், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி அரங்கில், நேற்று முன்தினம் நடந்தது.சங்க தலைவர் ராஜாசண்முகம், தலைமை வகித்து, பேசியதாவது:உலகளாவிய ஆடை வர்த்தக சந்தையை வசப்படுத்தி, அதிவிரைவாக முன்னேறுவதற்கான உகந்த தருணம், இதுதான். சீன எதிர்ப்பு அலையால், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல்வேறு நாட்டு வர்த்தகர்கள், சீனாவுக்கு வழங்கி வந்த ஆடை தயாரிப்பு 'ஆர்டர்'களை, பிற நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க துவங்கியுள்ளன. இந்த 'ஆர்டர்'களை வசப்படுத்துவதில், வியட்நாம் முன்னிலை வகிக்கிறது.கம்போடியா, வங்கதேசம் நாடுகள், அடுத்தடுத்த நிலையில் உள்ளன. சீனாவுக்கு கைநழுவும் 'ஆர்டர்'களை பெறுவதில் இந்தியா, கடைசி நிலையில் இருப்பது கவலையளிக்கிறது.நிலையான தரம்; குறித்த நேரத்தில் ஆடை தயாரிப்பதில், போட்டி நாடுகள் முன்னிலையில் உள்ளன. அரசு சலுகை, திட்டங்களை குறை சொல்வதில் பயனில்லை.ஆடை உற்பத்தி துறையினர், தங்களை சுய பரிசோதனை செய்து, பிரச்னை, குறைகளை கண்டறிந்து, உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். மெத்தனப்போக்கு இருக்க கூடாது. இதன்மூலம், புதிதாக உருவாகியுள்ள வர்த்தக வாய்ப்புகளை எளிதாக கைப்பற்ற முடியும்.லாபத்தை வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு விட்டு கொடுத்து, 'ஆர்டர்' பெறுவது மிக தவறான செயல்; இந்த போக்கு, நாளடைவில், நிறுவனத்தை வீழ்ச்சியில் தள்ளிவிடும். ஆடை தரம் மேம்படுத்தப்பட வேண்டும்; ஒரே சீரான தரத்தில் தயாரிக்க வேண்டும்.குறித்த காலத்துக்குள் ஆடை தயாரித்து, வெளிநாட்டு வர்த்தகருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம், நமது ஆடைகளுக்கு, நாமே விலை நிர்ணயிப்பவராக இருக்க முடியும். சுய ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வு, பிரச்னைகளை கண்டு கலங்காமல், தைரியமாக செயல்படும் பண்புகளை, தொழில் முனைவோர் வளர்த்து கொள்ளவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, துணை தலைவர் வேலுசாமி வரவேற்றார். பொது செயலாளர் விஜயகுமார், ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் மோகன், வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார். ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். சங்க உறுப்பினர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE