அனுப்பர்பாளையம்:பூலுவப்பட்டியில் உள்ள குட்டையில், தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, துார்வார மாநகராட்சி அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி, பூலுவப்பட்டி நால் ரோட்டில் இருந்து நெருப்பெரிச்சல் செல்லும் ரோட்டில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் மழைநீர் சேகரிப்பு குட்டை உள்ளது.மாநகராட்சியின், 16, 17 மற்றும் 19வது வார்டு பகுதியில் உள்ள வீடு, பனியன் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியேற, முறையான சாக்கடை கால்வாய் இல்லாததால், குட்டையில் தேங்கி நிற்கிறது.தேங்கிய கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, அப்பகுதியை சுற்றியுள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்று நீரும் பாதிக்கப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அத்துடன், துர்நாற்றம் வீசி, கொசு உற்பத்தியாகிறது.'தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும்' என, அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதன் விளைவாக, 16, 17 மற்றும் 19வது வார்டுகளை உள்ளடக்கி, கழிவுநீர் வெளியேற சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. இதன் மூலம், குட்டையில் கழிவுநீர் தேங்குவது தடுக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரை முற்றிலுமாக அகற்றி, தன்னார்வ அமைப்பினரின் உதவியுடன், அங்கு, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.அதன்படி, குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரை, மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. 'இதை தொடர்ந்து, குட்டையை துார் வாரும் பணி துவங்கும்' என, அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE